கரூரில் பரபரப்பு நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு ‘சீல்’ வைக்க முயன்ற அதிகாரிகள்


கரூரில் பரபரப்பு நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு ‘சீல்’ வைக்க முயன்ற அதிகாரிகள்
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 12 Dec 2019 7:46 PM GMT)

கரூரில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் ரூ.6¾ லட்சம் வாடகை பாக்கி வசூல் செய்யப்பட்டது.

கரூர்,

கரூர் நகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை அருகே சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதற்கு எதிர்புறத்தில் கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஒட்டியபடி கரூர் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் மாத வாடகைக்கு கடைகள் செயல்படுகின்றன. பத்திரம் எழுதி கொடுக்கும் கடை, 2 ஜெராக்ஸ் கடைகள் ஆகிய 3 கடைகளின் உரிமையாளர் களும் கடந்த சில ஆண்டு களாக நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருந்தனர்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பாக்கியை வசூல் செய்யுமாறு கரூர் நகராட்சி நிர்வாகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. எனினும் தொடர்ந்து வாடகை பாக்கியை செலுத்தாமல் இழுத்தடித்து வந்ததால், அந்த கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுப்பதற்கு கரூர் நகராட்சி முதுநிலை நகரமைப்பு அலுவலர் அன்பு, வருவாய் அலுவலர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் குழந்தைவேல், நகராட்சி பொறியாளர் (பொறுப்பு) நக்கீரன் உள்ளிட்ட அதிகாரிகள் போலீசாருடன் நேற்று வந்தனர்.

வாடகை வசூல்

பின்னர் வாடகை பாக்கியை செலுத்தாத கடைக்காரர்களை சந்தித்து, 3 கடைகளுக்கும் வாடகை பாக்கி உள்ளது. இதனை உடனே செலுத்துங்கள். இல்லையெனில் கடைகளின் ஷட்டரை இழுத்து மூடி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாடகை செலுத்திய பிறகு தான் கடையை நடத்த அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடைகளின் உரிமையாளர்கள் பணம் செலுத்த ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டனர். அதன் பிறகும் பணம் செலுத்தாமல் இழுத்தடிக்கப்பட்டதால், அதிகாரிகள் ஒரு கடையின் ஷட்டரை சீல் வைப்பதற்காக இறக்க முயன்றனர்.

அப்போது 3 கடைகளின் உரிமையாளர்களும் வாடகை பாக்கியை ஏற்பாடு செய்து விட்டோம் என கூறினர். இதையடுத்து அந்த 3 கடைகளில் இருந்தும் நீண்ட நாள் வாடகை பாக்கி ரூ.6லட்சத்து 80 ஆயிரத்தை நகராட்சி அதிகாரிகள் வசூலித்து விட்டு அதற்குரிய ரசீதை கொடுத்தனர். தொடர்ந்து வாடகையை மாதந்தோறும் சரியாக செலுத்திவிட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்திவிட்டு சென்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story