சிவகாசி அருகே பயங்கரம்: ஊர்கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்வதை எதிர்த்த வங்கி மேலாளர் கொலை


சிவகாசி அருகே பயங்கரம்: ஊர்கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்வதை எதிர்த்த வங்கி மேலாளர் கொலை
x
தினத்தந்தி 13 Dec 2019 4:30 AM IST (Updated: 13 Dec 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்ய நடத்திய ஊர் கூட்டத்தில் வங்கி மேலாளர் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. கிளை செயலாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாயில்பட்டி, 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோட்டைப்பட்டி கிராமம் உள்ளது. அங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கோட்டைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நள்ளிரவில்?ஊர்க்கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது, அதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளைச் செயலாளரான ராமசுப்பு (வயது (47) என்பவர், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுப்புராம் என்பவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த ஆலோசனை கூட்டத்திற்கு சுப்புராம் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் ராமசுப்பு தனக்கு வேண்டிய நபர்களை மட்டும் வைத்து கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த சுப்புராமின் சித்தப்பா விஜயகுமார் என்பவருடைய மகன் சதீஷ்குமார் (27) கூட்டத்திற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். மேலும் இதுபோன்ற கூட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், தனது அண்ணன் சுப்புராம் தேர்தலில் போட்டியிடுவதற்கு முறையாக விருப்ப மனு அளித்துள்ளதால் அவரையும் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர், சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. தாக்குதலில் பலத்த காயம் அடைந்து சுயநினைவை இழந்த சதீஷ்குமார் மயங்கி விழுந்துள்ளார்.இதனால் அங்கிருந்தவர்கள் சதீஷ்குமாரை காரில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது, சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக தகவல் அறிந்ததும் வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் பற்றி ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டைபட்டியை சேர்ந்த ராமசுப்பு, கணேசன், முத்துராஜ், ராம்குமார், சுப்புராஜ், செல்வராஜ் உள்பட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார், அவரது வீட்டில் மூத்த மகன் ஆவார். எம்.பி.ஏ. பட்டதாரியான அவர், சிவகாசியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார்.

சதீஷ்குமாரின் தந்தை விஜயகுமார் உடல் நலம் பாதிக்கப்பட்டவர். தம்பி ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர். மற்றொரு தம்பி பிளஸ்-2 முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் கைதான 7 பேரில் செல்வராஜ் சத்துணவு அமைப்பாளர் ஆவார்.

Next Story