பெங்களூருவில், வீடுகளில் திருடி வந்த ஒடிசாவை சேர்ந்த பிரபல திருடர்கள் 4 பேர் கைது - ரூ.64 லட்சம் தங்க நகைகள் மீட்பு


பெங்களூருவில், வீடுகளில் திருடி வந்த ஒடிசாவை சேர்ந்த பிரபல திருடர்கள் 4 பேர் கைது - ரூ.64 லட்சம் தங்க நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 13 Dec 2019 3:45 AM IST (Updated: 13 Dec 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வீடுகளில் திருடி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல திருடர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.64 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டு உள்ளன.

பெங்களூரு,

பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நகரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அனந்தகுமார்(வயது 31), ரமேஷ் சந்திரா சாகோ(32), பிஸ்வஜித் மாலிக்(23), துலால் சிங் சாகு(33) என்று தெரிந்தது. பெங்களூரு பொம்மனஹள்ளியில் 4 பேரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் 4 பேரும் ஒடிசாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்து, இங்குள்ள வசதி படைத்தவர்களின் வீடுகளை அடையாளம் கண்டு, அங்கு வேலைக்கு சேர்ந்துள்ளனர். சமையல் வேலை, வீட்டு வேலைகளை 4 பேரும் செய்வது வழக்கம். குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே அந்த வீடுகளில் வேலை செய்வார்கள். பின்னர் வீட்டின் உரிமையாளர் வெளியே செல்லும் சந்தர்ப்பத்தில், அந்த வீட்டில் இருந்து நகைகள், பணத்தை திருடிவிட்டு 4 பேரும் தலைமறைவாகி விடுவார்கள்.

தாங்கள் வேலை செய்யும் வீடு தவிர அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியூருக்கு செல்கிறார்களா?, வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்கிறார்களா? என்பதை கவனித்து, அந்த வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடுவதை 4 பேரும் வழக்கமாக கொண்டு இருந்தனர். இவ்வாறு திருடும் நகைகளை மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா மற்றும் ஒடிசா மாநிலத்தில் சில வியாபாரிகளிடம் 4 பேரும் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் 4 பேரை பற்றிய ரகசிய தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்திருந்தது. இதையடுத்து, 15 நாட்கள் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கண்காணித்து வந்தனர்.

பின்னர் 4 பேரையும், மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் கைது செய்திருந்தனர். கைதான 4 பேரும் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு வீடுகளில் திருடிய 1 கிலோ 600 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டு உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.64 லட்சம் ஆகும். இவர்கள் 4 பேரையும் கைது செய்திருப்பதன் மூலம் ஜே.பி.நகர், அல்சூர், எச்.ஆர்.நகர், பேடராயனபுரா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 15 திருட்டு வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உடன் இருந்தார்.

Next Story