இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி: பெயர் மாற்றத்தால் எடியூரப்பாவுக்கு கிடைத்த பரிசு


இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி: பெயர் மாற்றத்தால் எடியூரப்பாவுக்கு கிடைத்த பரிசு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 8:08 PM GMT)

இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி, பெயர் மாற்றத்தால் எடியூரப்பாவுக்கு கிடைத்த பரிசு என்று கருதப்படுகிறது.

பெங்களூரு,

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசியலில் வெற்றி பெற தங்களின் பெயரில் உள்ள ஆங்கில சொற்களை எண் கணிதப்படி சேர்ப்பது அல்லது நீக்குவதை பார்க்க முடிகிறது. தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் இறப்பதற்கு 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு, தனது பெயரில் ஆங்கில எழுத்துகளில் இறுதியில் ‘ஏ‘ என்ற ஆங்கில எழுத்தை கூடுதலாக சேர்த்து கொண்டார். அதே போல் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசு, திருநாவுக்கரசர் என்றும், வி.கோபாலசாமி, வைகோ என்றும் மாற்றிக்கொண்டதாக அரசியல் விமர்சகர் தராசு ஷியாம் கூறுகிறார்.

சினிமா விமர்சகர் பரத்குமார், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஜோதிடம், எண்கணிதம் உளிட்டவைகளில் நம்பிக்கை இல்லாதவர். 1981-ம் ஆண்டு வெளியான ராஜபார்வை படத்தில் ‘கமலஹாசன்‘ என்ற பெயரில் ‘கமல‘ என்று நிறைவடையும் பகுதியில் ‘ஏ‘ என்ற எழுத்து சேர்க்கப்பட்டிருந்தது. அதன் பிறகு 1986-ம் ஆண்டில் வெளியான அவரது படங்களில் ‘கமல்ஹாசன்‘ என்று குறிப்பிடப்பட்டது. அதாவது அந்த ஆங்கில பெயரில் உள்ள ‘ஏ‘ எழுத்து நீக்கப்பட்டது.

கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா 3-வது முறையாக கடந்த ஜூலை மாதம் பதவி ஏற்றார். ஜோதிடம், பஞ்சாங்கம், எண்கணிதத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டவர், அவர் பதவி ஏற்பதற்கு முன்பு எடியூரப்பா என்ற பெயரில் உள்ள ஆங்கில எழுத்துகளில் இரண்டு ஆங்கில ‘டி‘ எழுத்து இருந்தது. அதில் ஒரு ‘டி‘-யை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ‘ஐ‘ என்ற ஆங்கில எழுத்தை எடியூரப்பா சேர்த்துக் கொண்டார். இந்த பெயரில் ஆங்கில சொல் மாற்றப்பட்ட பிறகு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார்.

அதன் பிறகு தற்போது 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலை எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எதிர்கொண்டது. இதில் 12 தொகுதிகளில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் கர்நாடக பா.ஜனதாவில் எடியூரப்பா சக்தி வாய்ந்த தலைவராக மீண்டும் உருவெடுத்துள்ளார். பெயர் மாற்றத்தால் அவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றபோது, மந்திரிகள் நியமனம் 20 நாட்களுக்கு மேல் தாமதமானது. மந்திரிகளை முடிவு செய்யும் அதிகாரத்தை எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் வழங்கவில்லை என்று அப்போது தகவல் வெளியானது.

எடியூரப்பாவின் விருப்பத்திற்கு மாறாக 3 துணை முதல்-மந்திரிகளை அக்கட்சி மேலிடம் நியமனம் செய்தது. கட்சியில் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இதனால் முதல்-மந்திரியாக இருந்தாலும், ஆட்சியிலும், கட்சியிலும் எடியூரப்பாவுக்கு அதிகாரம் இல்லை என்று எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன. இந்த நிலையில் இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி வாகை சூடியிருப்பதன் மூலம் பா.ஜனதாவில் எடியூரப்பாவின் செல்வாக்கு மீண்டும் அதிகரித்துள்ளது.

எடியூரப்பா இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு முதல் முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்பதற்கு முன்பு, தனது பெயரில் ஆங்கில சொல் ‘ஐ‘-யை நீக்கிவிட்டு இன்னொரு ‘டி‘யை சேர்த்துக் கொண்டார் என்பதும், இந்த ஆங்கில சொல் மாற்றத்திற்கு பிறகு ஒரே வாரத்தில் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story