மேச்சேரியில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற மூதாட்டி கைது


மேச்சேரியில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற மூதாட்டி கைது
x
தினத்தந்தி 13 Dec 2019 3:45 AM IST (Updated: 13 Dec 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரியில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

மேச்சேரி,

சேலம் மாவட்டம், மேச்சேரி சந்தைபேட்டை அருகே காய்கறி கடை நடத்தி வருபவர் குமார். நேற்று காலையில் இவரது கடைக்கு மூதாட்டி ஒருவர் வந்தார். அவர் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்கிக்கொண்டு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அதற்கு சில்லரை இல்லையா? என்று கடைக்காரர் கேட்டுள்ளார். ஆனால் அந்த மூதாட்டி, என்னிடம் சில்லரை இல்லை, நீங்கள் வேண்டும் என்றால் 500 ரூபாய்க்கு ரூ.150 எடுத்துக்கொண்டு ரூ.350 மட்டும் மீதம் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் குமார், அந்த ரூபாய் நோட்டு கள்ள நோட்டா? என்று சந்தேகம் அடைந்தார். உடனே அந்த ரூபாய் நோட்டை இருபுறமும் திருப்பி பார்த்த அவர் அது கள்ள நோட்டு என்ற சந்தேகத்தின் பேரில், அந்த மூதாட்டியை மேச்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தார்.

இதையடுத்து போலீசார் அந்த 500 ரூபாய் நோட்டை சோதித்து பார்த்த போது, அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூதாட்டியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம், ஒஸ்பேட் டி.பி. டேம் பகுதியை சேர்ந்த அனுரராவின் மனைவி செல்வி(வயது 61) என்பதும், அவர் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவருக்கு யாரிடம் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகள் வந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே மூதாட்டி செல்வி, மேச்சேரி அருகே உள்ள மாதநாயக்கன்பட்டியை சேர்ந்த குமரேசன், தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த முருகன் ஆகியோரிடம் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற கொடுத்துள்ளதாகவும் கூறினார். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேச்சேரியில் காய்கறி கடையில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற மூதாட்டியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story