ரஜினி எப்போது கட்சி தொடங்குவார்? சத்திய நாராயண ராவ் பேட்டி


ரஜினி எப்போது கட்சி தொடங்குவார்? சத்திய நாராயண ராவ் பேட்டி
x
தினத்தந்தி 13 Dec 2019 4:30 AM IST (Updated: 13 Dec 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார்? என்பது குறித்து அவரது சகோதரர் சத்திய நாராயண ராவ் திருச்செங்கோட்டில் பேட்டி அளித்தார்.

திருச்செங்கோடு,

நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று 70-வது பிறந்தநாள். இதையொட்டி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கி அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் நேற்று மாலை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயண ராவ் திருச்செங்கோடு வந்து, கார் மூலம் அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு சென்றார். அங்கு ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் திரளாக கூடி இருந்தனர். கோவில் அர்ச்சகர்கள் சத்திய நாராயண ராவுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளித்து கோவிலுக்கு உள்ளே அழைத்து சென்றனர்.

தங்கத்தேர்

அங்கு அர்த்தனாரீஸ்வரர் சாமி, செங்கோட்டு வேலவர் சாமி, ஆதிகேசவ பெருமாள் சாமிகளை அவர் தரிசனம் செய்து, பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். தொடர்ந்து அர்த்தனாரீஸ்வரர் தங்கத்தேரோட்டம் நடைபெற்றது.

அப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து சத்திய நாராயண ராவ் தங்கத்தேர் இழுத்தார். தங்கத்தேர் கோவில் உட்பிரகாரம் பகுதியில் வலம் வந்து சேர்ந்தது. பின்னர் அர்ச்சகர்கள் அவருக்கு பிரசாதம் வழங்கினார்கள். அவர் அதை பெற்றுக்கொண்டார்.

பேட்டி

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சத்திய நாராயண ராவ் பேட்டி அளித்தார். அப்போது அவர், ரஜினியின் 70-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு பகுதிகளில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு நல உதவிகள் செய்ததும், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்ததும் என்னை மிகவும் நெகிழ வைத்தது. ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என்பது குறித்தோ, அவர் அரசியலுக்கு வருவது குறித்தோ அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.

Next Story