பெரியகடை போலீஸ்நிலையத்தில், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு - திடீர் ஆய்வு


பெரியகடை போலீஸ்நிலையத்தில், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு - திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 12 Dec 2019 10:09 PM GMT)

புதுச்சேரி பெரியகடை போலீஸ் நிலையத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அவர் பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பெரியகடை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைககள் குறித்து கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் பணியில் இருந்த பீட் போலீசாரின் கை புத்தகத்தை வாங்கி அவர்கள் கடந்த ஒருவாரமாக செய்த பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர்களிடம், ‘பீட் போலீசார் தாங்கள் ரோந்து செல்லும் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நன்றாக பழக வேண்டும். அந்த பகுதியில் ஏதாவது சம்பவங்கள் நடந்தாலோ, குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு அறிகுறிகள் ஏதாவது தென்பட்டாலோ உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உங்கள் பகுதிகளில் உள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஊருக்குள் நுழைய தடை செய்யப்பட்ட ரவுடிகள் யாராவது ஊருக்குள் நுழைந்தால் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

கடமைக்காக மட்டுமே ரோந்து பணி செல்லாமல் மக்கள் அமைதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும். இது போல் நான் தொடர்ந்து ஆய்வு பணி மேற்கொள்வேன். அப்போது உங்கள் பணிகளை பட்டியலிட்டு காட்ட வேண்டும்’ என்றார். இந்த ஆய்வின் போது கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் உடனிருந்தார்.

Next Story