கடையில் சோதனை செய்ய சென்ற போது, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து தற்கொலை மிரட்டல் விடுத்த வியாபாரி


கடையில் சோதனை செய்ய சென்ற போது, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து தற்கொலை மிரட்டல் விடுத்த வியாபாரி
x
தினத்தந்தி 13 Dec 2019 3:30 AM IST (Updated: 13 Dec 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் உள்ள கடையில் அதிகாரிகள் சோதனை செய்ய சென்ற போது அங்கிருந்த வியாபாரி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து தற்கொலை மிரட்டல் விடுத்தார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

திண்டுக்கல்,

திண்டுக்கல் பூ மார்க்கெட் மற்றும் மேற்குரத வீதிகளில் உள்ள கடைகளில் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் குழுவினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது பூ மார்க்கெட்டில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பாலித்தீன் பைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பூ வியாபாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

அதையடுத்து திண்டுக்கல் மேற்குரத வீதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது கடையில் இருந்த வியாபாரி ஒருவர், அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு துப்புரவு ஆய்வாளர்கள் குழுவினர் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடமும், அந்த வியாபாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தனது கடையில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்தாலோ அல்லது தனக்கு அபராதம் விதித்தாலோ தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்றால் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதன்பிறகு அந்த கடையில் இருந்த 450 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

Next Story