சி.பி.ஐ. அதிகாரி என்று கூறி டாக்டரிடம் 8½ பவுன் நகை மோசடி; 2 பேர் கைது


சி.பி.ஐ. அதிகாரி என்று கூறி டாக்டரிடம் 8½ பவுன் நகை மோசடி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2019 10:23 PM GMT (Updated: 12 Dec 2019 10:23 PM GMT)

காஞ்சீபுரத்தில் டாக்டரிடம், சி.பி.ஐ. அதிகாரி என்று கூறி 8½ பவுன் தங்க நகைகளை நூதன முறையில் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பொன்னேரிகரை பகுதி இந்திரா நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 40). இவர், காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே, ஓமியோபதி கிளினிக் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், இவரது கிளினிக்குக்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பீவிகாபர்மா (33), இவரது நண்பர் சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த குமாரசாமி (59) ஆகியோர் சென்றனர். அப்போது ஓமியோபதி டாக்டரை பார்த்து பீவிகாபர்மா நாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். உங்களது கிளினிக்கை சோதனை செய்ய வேண்டும். நீங்கள் கிளினிக் நடத்தும் சான்றிதழை காண்பியுங்கள் என்று கூறினார்.

ஆனால், டாக்டர் கோபிநாத், நீங்கள் சி.பி.ஐ. அதிகாரிகளா? உங்களுடைய அடையாள அட்டையை காண்பியுங்கள் என்று கேட்டார். பின்னர், போலீஸ் வம்பு எதற்கு என்று கூறி தனது வீட்டிற்கு சென்று, 8½ பவுன் தங்க நகைகளை, பீவிகாபர்மாவிடம் கோபிநாத் கொடுத்தார். பிறகு, பீவிகாபர்மாவும் அவரது நண்பர் குமாரசாமியும் தங்க நகைகளுடன் தப்பி விட்டனர்.

வலைவீச்சு

இதுகுறித்து கோபிநாத், பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி போலி நாடகமாடிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையில், பீவிகாபர்மா கேளம்பாக்கம் ஜங்சனில் இருப்பதாக அவரது செல்போனை வைத்து தெரிந்து கொண்டனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் மின்னல் வேகத்தில், கேளம்பாக்கம் ஜங்சனுக்கு விரைந்து சென்றனர்.

2 பேர் கைது

அங்கு நின்று கொண்டிருந்த பீவிகாபர்மா அவரது நண்பர் குமாரசாமி ஆகியோரை போலீசார் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 2 பேரை காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் 2 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story