ஓசூர் அருகே சானமாவு காட்டில் இருந்த 60 யானைகள் விரட்டியடிப்பு


ஓசூர் அருகே சானமாவு காட்டில் இருந்த 60 யானைகள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2019 4:30 AM IST (Updated: 13 Dec 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே சானமாவு காட்டில் இருந்த 60 யானைகள் விரட்டியடிக்கப்பட்டன.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக, 30 யானைகள் சுற்றித்திரிந்தன. இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காட்டிலிருந்து 70-க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு சானமாவு வனப்பகுதிக்கு வந்தன.

இந்த யானைகளையும் சேர்த்து சானமாவு வனப்பகுதியில் மொத்தம் 100 யானைகள் முகாமிட்டிருந்தன. அவைகள் இரவு நேரத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த தக்காளி, பீன்ஸ், ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

விரட்டியடிப்பு

இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானைகளை விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நேற்று 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சானமாவு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை பட்டாசு வெடித்தும், அதிக சத்தம் எழுப்பியும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினரின் தீவிர முயற்சியால், 60 யானைகள் அதன் குட்டிகளுடன் கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையை கடந்து பென்னிக்கல் வழியாக ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு சென்றன.

வனத்துறையினர் தீவிரம்

இந்த யானைகள் சாலையை கடந்து சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், 40 யானைகள் மட்டும் சினிகிரிபள்ளி வரை சென்றுவிட்டு, மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கே திரும்பி விட்டன. இந்த யானைகளையும் அங்கிருந்து விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story