திண்டிவனத்தில், மின் பொறியாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்


திண்டிவனத்தில், மின் பொறியாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 10:47 PM GMT)

திண்டிவனத்தில் மின்பொறியாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம்,

திண்டிவனம் காவேரிபாக்கம் பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்குட்பட்ட திண்டிவனம் நகரம்-1 உதவி பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. நிர்வாக வசதிக்காக திண்டிவனம் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) இடமாற்றம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதையறிந்த காவேரிப்பாக்கம் பகுதி பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மின் பொறியாளர் அலுவகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இங்கு இயங்கி வரும் மின்பொறியாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்தால், இங்குள்ள மக்கள் சற்று தொலைவில் உள்ள துணைமின் நிலையத்துக்கு சென்று வர சிரமம் ஏற்படும். ஆகவே இந்த அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என கூறி மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், முன்னாள் வார்டு கவுன்சிலர் ஜெயராஜ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, செயற்பொறியாளர் விடுமுறையில் உள்ளார். எனவே, அவர் வந்த பிறகு மின்பொறியாளர் அலுவலக பிரச்சினை குறித்து பேசி தீர்வு காணலாம் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story