முதுமலை வனப்பகுதியில், சுருள்கொம்பு மான்கள், வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு


முதுமலை வனப்பகுதியில், சுருள்கொம்பு மான்கள், வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2019 10:15 PM GMT (Updated: 13 Dec 2019 5:22 PM GMT)

முதுமலை வனப்பகுதியில் சுருள்கொம்பு மான்கள், வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எனவே கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மசினகுடி,

மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடத்தில் நீலகிரி மாவட்டம் அமைந்து உள்ளது. இது தமிழகத்தில் அதிக வனப்பகுதி கொண்ட மாவட்டமாக இருப்பதுடன், முக்கிய உயிர்சூழல் மண்டலமாகவும் திகழ்கிறது. இதில் முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான வனப்பகுதியும், முக்குருத்தி தேசிய பூங்காவின் கட்டுப்பாட்டில் உள்ள 78 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான வனப்பகுதியும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த 2 வனப்பகுதிகளும் வெவ்வேறு காலநிலைகளை கொண்டு உள்ளன.

குறிப்பாக முதுமலை, மசினகுடி, சிங்காரா, சீகூர், தெங்குமரஹாடா உள்ளிட்ட 7 வனப்பகுதிகளில் அதிகமான காட்டுயானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள், கரடிகள் உள்ளிட்டவைகள் வாழ்ந்து வருகின்றன. இது தவிர அரிய வகையான வெளிமான்கள் என்று அழைக்கப்படும் சுருள்கொம்பு மான்கள், வரையாடுகள் உள்ளன. இவை உயரமான மலைபிரதேசமான முக்குருத்தி வனப்பகுதியிலும் காணப்படுகின்றன.

ஆரம்பத்தில் சுருள்கொம்பு மான்கள், வரையாடுகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் வேட்டையாடுதல் மற்றும் நோய் பரவுதல் உள்ளிட்ட காரணங்களால், அவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைய தொடங்கியது. இது தமிழக வனத்துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சுருள்கொம்பு மான்கள் மற்றும் வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வன மேலாண்மை திட்டங்களை வனத்துறை கொண்டு வந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக தற்போது சுருள்கொம்பு மான்கள், வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

அதாவது 100-க்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த சுருள்கொம்பு மான்கள், தற்போது 1,500 முதல் 1,700 வரையிலான எண்ணிக்கையில் இருப்பதாக வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று வரையாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து, அவை 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

அழிவின் பிடியில் இருந்த மேற்கண்ட அரிய வகை வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது வனத்துறையினர் மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மகிழ்ச்சி அடைய செய்து உள்ளது. இதனால் அவைகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து ஊட்டி அரசு கலைக்கல்லூரியின் வனவிலங்கு உயிரியல் துறை உதவி பேராசிரியர் ராமகிரு‌‌ஷ்ணன் கூறியதாவது:-

அழிந்து வரும் வனவிலங்குகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சுருள்கொம்பு மான்கள் மற்றும் வரையாடுகளை பாதுகாப்பது முக்கியமானது. வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், நீர்ப்பிடிப்பு பகுதிகள் நன்றாக உள்ளது என்று கூற முடியும். மேலும் சுருள் கொம்பு மான்கள் மற்றும் வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் புலிகள், சிறுத்தைப்புலிகளுக்கு உணவு தட்டுப்பாடு இருக்காது. இந்த 2 வகை வனவிலங்குகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். குறிப்பாக சுருள்கொம்பு மான்கள் குறித்து கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே பிற வனவிலங்குகளுடன் சேர்த்து கணக்கெடுப்பதை விட அவற்றை தனியாக கணக்கெடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்தால் தான் உண்மையான எண்ணிக்கை தெரியும். இதற்கு வனத்துறையினர் ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story