உள்ளாட்சி தேர்தல் பணியில் 21 ஆயிரத்து 645 பேர் - கலெக்டர் ராமன் தகவல்
உள்ளாட்சி தேர்தல் பணியில் 21 ஆயிரத்து 645 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. இந்த பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கான அறிவிப்பு ஆணை அச்சிடும் பணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. வருகிற 16-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகும். 17-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 19-ந்தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஆகும்.
உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டத்தில் மொத்தம் 2,741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 2 ஆயிரத்து 953 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 18 ஆயிரத்து 692 வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 21 ஆயிரத்து 645 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 15-ந்தேதி நடக்கிறது. எனவே உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story