கீழ்வேளூர் அருகே, சாலையின் நடுவே உள்ள பள்ளம் மூடப்படுமா? - பொதுமக்கள் கோரிக்கை


கீழ்வேளூர் அருகே, சாலையின் நடுவே உள்ள பள்ளம் மூடப்படுமா? - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Dec 2019 10:15 PM GMT (Updated: 13 Dec 2019 6:37 PM GMT)

கீழ்வேளூர் அருகே சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிக்கல், 

நாகை ஒன்றியம் ஆழியூர் கிராமத்தில் மேலத்தெரு, வடக்கு தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலத்தெருவையும், கடம்பர வாழ்க்கையையும் இணைக்கும் வகையில் சாலை உள்ளது. இந்த சாலையில் கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் கடம்பரவாழ்க்கை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் குறுக்கே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த பாலத்தில் உள்ள சாலையில் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாலமும் சேதமடைந்துள்ளது.

இந்த சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உயிர்பலி ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர். இரவு நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்பலி ஏற்படும் முன்பு சாலையில் உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story