வலங்கைமான் அருகே, குடும்பம் நடத்த அழைத்து வந்த பெண்ணை கட்டையால் அடித்து கொன்ற தொழிலாளி- போலீசில் சரண்
வலங்கைமான் அருகே குடும்பம் நடத்த அழைத்து வந்த பெண்ணை கட்டையால் அடித்து கொன்ற தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குப்பசமுத்திரம் கலைஞர் காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் குமார் நாதன்(வயது 44). கூலி தொழிலாளியான இவருக்கும், மேரி என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்னர் 3 ஆண்டுகள் இவர்களது வாழ்க்கை சிறப்பாக நடந்து வந்தது. அதன் பின்னர் கணவரது நடவடிக்கை பிடிக்காததால் மேரி, கணவரை விட்டு பிரிந்து தனியாக வெளியூரில் வசித்து வருகிறார்.
குமார் நாதனுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. மேலும் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தனியாக வசித்து வந்த குமார் நாதன், கணவனால் கைவிடப்பட்ட அல்லது விதவை பெண்களை தேடிப்பிடித்து அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை தன்னுடன் குடும்பம் நடத்த அழைத்து வந்துள்ளார். இவ்வாறு பல்வேறு பெண்களை அவர் அழைத்து வந்து தனது வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஒரு பெண்ணையும், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணையும் இதேபோன்று ஆசைவார்த்தைகளை கூறி தன்னுடன் அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார். இவ்வாறு வந்த பெண்கள் இருவரும் குமார் நாதனின் நடவடிக்கை பிடிக்காததால் அவரிடம் இருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த நிலையில் வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் மகள் கவிதா(38), தனது கணவர் இறந்து விட்டதால் ஆலங்குடி பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரிடம் வழக்கம்போல் ஆசை வார்த்தைகளை கூறிய குமார்நாதன், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அவரது ஆசை வார்த்தைகளில் மயங்கிய கவிதா, அவருடன் குடும்பம் நடத்த வந்துள்ளார்.
இரண்டு மாதங்கள் மட்டுமே நல்ல முறையில் இருந்த குமார் நாதன் அதன்பின்னர் வழக்கம்போல் கவிதாவுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதனால் குமார் நாதனை விட்டு பிரிந்த கவிதா கடந்த 3 மாதங்களாக கண்டியூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையில் குமார்நாதன், வலங்கைமான் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், தன்னுடன் குடும்பம் நடத்த கவிதா மறுத்து வருவதாகவும், எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி கவிதாவை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வலங்கைமான் போலீசார் கவிதாவை அழைத்து சமரசம் செய்து வைத்துள்ளனர்.
போலீசார் சமரசம் செய்து வைத்ததை தொடர்ந்து கவிதா மீண்டும் குமார் நாதனுடன் குடும்பம் நடத்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை கவிதாவுக்கும், குமார் நாதனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குமார் நாதன், கவிதாவை உருட்டுக்கட்டையால் அடித்துள்ளார்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கவிதா, வீட்டிற்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். கவிதாவை அடித்துக்கொன்ற குமார் நாதன் வலங்கைமான் போலீசில் சரண் அடைந்து தான், கவிதாவை அடித்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இது தொடர்பாக கவிதாவின் சகோதரர் கார்மேகம் கொடுத்த புகாரின் பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சரண் அடைந்த குமார் நாதனை கைது செய்து வலங்கைமான் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தன்னுடன் குடும்பம் நடத்த வந்த பெண்ணை தொழிலாளி, கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story