தொண்டி அருகே, மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை


தொண்டி அருகே, மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Dec 2019 10:45 PM GMT (Updated: 13 Dec 2019 9:06 PM GMT)

தொண்டி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொண்டி, 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பெருமாள் ஏந்தல்புதுக்குடி கிராமத்தின் எதிரே தளிர்மருங்கூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் அரசு மதுக்கடை புதிதாக திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தளிர்மருங்கூர், பாகனவயல், புதுக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த மதுக்கடையை முற்றுகையிட்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவாடானை தாசில்தார் சேகர், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த கடையின் வழியாகத்தான் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் ஏராளமான பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர். இங்கு அரசு மதுக்கடை அமைந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும். மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே இங்கு மதுக்கடை அமைக்கக்கூடாது என்று கூறி, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதற்கு அதிகாரிகள், கலெக்டரின் உத்தரவின்படி உரிய அனுமதி பெற்றுத்தான் இங்கு கடை திறக்கப்படுகிறது. எல்லா விதிமுறைகளுக்கும் உட்பட்டு திறக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர். ஆனாலும் பொதுமக்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்ததால் இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அவரது உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுவரை இங்குமதுக் கடை திறக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் தங்களது கோரிக்கையை கலெக்டரிடம் நேரில் தெரிவித்து மனு அளிக்க உள்ளதாக கூறிவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story