திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுக்கு தூய்மையான சூழலை உருவாக்கியது துப்புரவு பணியாளர்கள்தான - கலெக்டர் பெருமிதம்


திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுக்கு தூய்மையான சூழலை உருவாக்கியது துப்புரவு பணியாளர்கள்தான - கலெக்டர் பெருமிதம்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:30 PM GMT (Updated: 13 Dec 2019 7:48 PM GMT)

திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு தூய்மையான சூழலை உருவாக்கியது துப்புரவு பணியாளர்கள்தான் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பெருமிதத்துடன் கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 10-ந் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். மறுநாள் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காகவும் திருவண்ணாமலைக்கு ஆயிரகணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

இந்த நிலையில் பல லட்சம் பக்தர்கள் வந்ததால் நகரில் குப்பைகளை அகற்ற திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் 87 நிரந்தர துப்புரவு பணியாளர்கள், 286 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் கூடுதலாக 400 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்தனர். மேலும் 8 நகராட்சிகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 1-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவும், பகலும் மாடவீதி, கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தினமும் உடனுக்குடன் குப்பைகள் அகற்றப்பட்டன.

துப்புரவு பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் என நகராட்சி பணியாளர்களை பாராட்டி மதிப்பூதியம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் நவேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்களுக்கு தலா ரூ.1000 மதிப்பூதியம், புத்தாடை ஆகியவற்றை வழங்கினார்.

முன்னதாக அவர் பேசியதாவது:-

“திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வந்திருந்தனர் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு இருந்தாலும் உங்களது சேவை தான் மிக பெரியது. நீங்கள் செய்த பணியால் உங்களுக்கு மட்டுமல்ல... உங்களது சந்ததியினருக்கும் சேர்த்து புண்ணியம் கிடைக்கும். நீங்கள் செய்த பணி அருணாசலேஸ்வருக்கு செய்த தொண்டாகும். திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்த பக்தர்களுக்கு நீங்கள் தான் தூய்மையான சூழ்நிலை உருவாக்கி கொடுத்து உள்ளர்கள். உங்களால் மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்ந்து உள்ளது. உங்களது பணியை பாராட்ட வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் எங்களிடம் கேட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு நகராட்சி சார்பில் மதிய விருந்தும் வழங்கப்பட்டது.

Next Story