அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீங்கியது - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீங்கியது - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:00 PM GMT (Updated: 13 Dec 2019 7:48 PM GMT)

அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீங்கியதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

விக்கிரமசிங்கபுரம், 

நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும். இதில் குளிக்க தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணைகளில் இருந்து உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் பாதையே தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 28-ந் தேதி முதல் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அகஸ்தியர் அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது. அன்று முதல் தொடர் மழையால் தொடர்ச்சியாக 15 நாட்கள் இந்த தடை நீடித்தது.

தற்போது ஆற்றில் வெள்ளம் குறைந்ததால் நேற்று முதல் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்தது. இதனை அறிந்த சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து ஆனந்தமாக குளித்தனர். தடை விலக்கப்பட்ட முதல் நாள் என்பதால் நேற்று குறைவான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். இதனால் அவர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Next Story