சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை


சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Dec 2019 10:15 PM GMT (Updated: 13 Dec 2019 8:24 PM GMT)

சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

பந்தலூர்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரங்கோடு ஊராட்சியில் 312 பேர் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடும்ப செலவுக்கு பணமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். சம்பளம் வழங்கக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்கள் முறையிட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று சேரம்பாடியில் உள்ள சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் சம்பளம் வழங்கக்கோரி கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சேரங்கோடு ஊராட்சி செயலாளர் சஜீத், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த கதிரவன் ஆகியோர் நேரில் வந்து, தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறும்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சியிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போது சம்பளம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

எனவே அடுத்த 2 நாட்களுக்குள் சம்பளம் வழங்க ஆவன செய்யப்படும் என்றனர். இதை ஏற்று தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story