முதுகுளத்தூர் அருகே, ஊராட்சி தலைவர் பதவி ரூ.16 லட்சத்திற்கு ஏலம் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்


முதுகுளத்தூர் அருகே, ஊராட்சி தலைவர் பதவி ரூ.16 லட்சத்திற்கு ஏலம் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 14 Dec 2019 4:15 AM IST (Updated: 14 Dec 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே கிராம மக்கள் ஊராட்சி தலைவர் பதவியை ரூ.16 லட்சத்திற்கு ஏலம் விட்டுள்ளதாக கூறி புகார் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவியை ஏல முறையில் தேர்வு செய்து மோசடி நடப்பதாக பல்வேறு கிராமங்களில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள் திரளாக வந்து மனுக்கள் வழங்கி உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தஞ்சாக்கூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாக கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அளித்த புகார்மனுவில் கூறியிருப்பதாவது:-

பொசுக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட எங்கள் பகுதியில் ஆதிதிராவிடர்கள் அதிக அளவில் வசித்து வருகிறோம். இந்தநிலையில் தற்போது எங்கள் தொகுதி தனி ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாங்கள் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவரை தலைவராக தேர்வு செய்து எங்கள் கிராம பகுதிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை நிறைவேற்றி கொள்ள முடிவு செய்துள்ளோம். ஆனால் நாங்கள் ஓட்டு போட்டு தலைவரை தேர்வு செய்துவிடக்கூடாது என்று கருதி சிலர் கூட்டு சேர்ந்து ரூ.16 லட்சம் ஏலம் விட்டு அவர்களின் பினாமியாக அருந்ததியினர் இனத்தை சேர்ந்த பெண்களை வேட்பாளராக நிறுத்த வேட்பு மனுத்தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.

எனவே இதுகுறித்து விசாரித்து ஏலத்தை ரத்து செய்து முறைப்படி ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவரை தலைவர் பதவிக்கு நிற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story