நிர்மலாதேவி வழக்கை வேறுமாநிலத்துக்கு மாற்ற சுப்ரீம்கோர்ட்டில் மனு - வக்கீல் பரபரப்பு பேட்டி


நிர்மலாதேவி வழக்கை வேறுமாநிலத்துக்கு மாற்ற சுப்ரீம்கோர்ட்டில் மனு - வக்கீல் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 13 Dec 2019 10:30 PM GMT (Updated: 13 Dec 2019 9:10 PM GMT)

நிர்மலாதேவி வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவரது வக்கீல் பேட்டி அளித்தார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் தற்போது ஜாமீனில் உள்ளனர். இவர்கள் நேற்று வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் ஆஜராகினர்.

அப்போது, தனியார் கல்லூரி செயலாளர் ராமசாமியிடம் மூடிய நீதிமன்றத்தில் அரசு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வருகிற 27-ந் தேதி மீண்டும் நிர்மலாதேவி உள்பட 3 பேரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி பரிமளா உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

பின்னர் நிர்மலாதேவி தரப்பு வக்கீல் பசும்பொன் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிர்மலாதேவியை அரசு தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்ய தடைவிதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 27-ந்தேதி வரை குறுக்கு விசாரணை செய்ய தடை விதித்துள்ளார்.

நிர்மலாதேவி வழக்கு சம்பந்தமாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, 1 முதல் 32-வது வரையுள்ள சாட்சிகளை படம் எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையை விதித்ததுடன், நிர்மலாதேவி குறித்து செய்தி வெளியிட தடை இல்லை எனவும் உத்தரவிட்டுள்ளார்.

நிர்மலாதேவி வழக்கில் அமைச்சர்களும் தொடர்பில் உள்ளதால் நிர்மலாதேவிக்கு உரிய நியாயம் கிடைக்காது என்பதாலும், தண்டனைதான் கிடைக்கும் என்று கருதுவதாலும் வேறு மாநிலத்தில் இந்த வழக்கை நடத்த வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் இன்னும் ஒரு சில நாட்களில் மனுதாக்கல் செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story