மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவிடம் நலம் விசாரித்தார், ரமேஷ் ஜார்கிகோளி


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவிடம் நலம் விசாரித்தார், ரமேஷ் ஜார்கிகோளி
x
தினத்தந்தி 14 Dec 2019 4:45 AM IST (Updated: 14 Dec 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை சந்தித்து ரமேஷ் ஜார்கிகோளி நலம் விசாரித்தார். “கட்சி மாறினாலும் அவரே என் அரசியல் குரு” என்று ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை நேற்று காலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருக்கும் ரமேஷ் ஜார்கிகோளி சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது ரமேஷ் ஜார்கிகோளியிடம் “எப்போது நான் அழைத்தேன், இப்போது வந்திருக்கிறீர்கள்” என்று சித்தராமையா நகைச்சுவையாக கேட்டார். பின்னர் 2 பேரும் 15 நிமிடங்கள் தனியாக பேசி கொண்டிருந்தனர்.

பின்னர் வெளியே வந்த ரமேஷ் ஜார்கிகோளி நிருபர்களிடம் கூறுகையில், “சித்தராமையா எனது தலைவர். அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை(அதாவது இன்று) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப இருப்பதாக கூறினார். நான் கட்சி மாறினாலும், அவரே எனது தலைவர். எனது அரசியல் குரு அவர் தான். நானும், சித்தராமையாவும் அரசியல் உள்ளிட்டவை குறித்து பேசினோம். நாங்கள் என்ன பேசினோம் என்பதை பகிரங்கமாக சொல்ல முடியாது“ என்றார்.

இதுபோல, காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை தனியார் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும் சித்தரா மையாவை சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி கேந்திரா சுவாமி சந்தித்து நலம் விசாரித்தார்.

Next Story