பள்ளி ஆசிரியையை காரில் கடத்தி ரூ.90 ஆயிரம் பறித்த கும்பல்: அண்ணன்-தம்பி கைது


பள்ளி ஆசிரியையை காரில் கடத்தி ரூ.90 ஆயிரம் பறித்த கும்பல்: அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 13 Dec 2019 11:04 PM GMT (Updated: 13 Dec 2019 11:04 PM GMT)

நண்பருடன் திருமணம் செய்து வைப்பதாக கூறி பள்ளி ஆசிரியையை காரில் கடத்தி ரூ.90 ஆயிரம் பறித்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்,

தனது நண்பருடன் திருமணம் செய்து வைப்பதாக கூறி கோவையை சேர்ந்த பெண் ஆசிரியையை காரில் கடத்தி ரூ.90 ஆயிரத்தை பறித்த கும்பலை சேர்ந்த அண்ணன்-தம்பியை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சசிகலா(வயது 43). இவர் இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய பள்ளி பருவக்கால நண்பர் ஆசாத்(44). இவர் பல்லடத்தை சேர்ந்தவர்.

கடந்த சில மாதத்துக்கு முன்பு பல்லடத்தில் நடந்த விழாவுக்கு சென்ற சசிகலா தனது நண்பரான ஆசாத்தை சந்தித்து பேசியுள்ளார். அப்போது சசிகலா தனக்கு திருமணமாகி விவாகரத்து பெற்றதாக தெரிவித்துள்ளார். இதற்கு ஆசாத், சசிகலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். ஆசாத் ஏற்கனவே திருமணமானவர் ஆவார்.

இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக ஆசாத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி சசிகலாவை போனில் தொடர்பு கொண்ட நபர் தனது பெயர் மதன் என்றும், ஆசாத்தின் நண்பர் என்றும் கூறியுள்ளார். பின்னர் ஆசாத்துடன் திருமணம் செய்து வைக்க தங்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதன்பிறகு மதன் கூறியபடி கடந்த 1-ந்தேதி மதியம் 12 மணியளவில் திருப்பூர் திருமுருகன்பூண்டி அருகே அவினாசி ரோட்டில் உள்ள தனியார் கிரானைட் கடைக்கு முன்பு சசிகலா காத்திருந்துள்ளார். அங்கு காரில் வந்த மதன், சசிகலாவை காரில் ஏற்றியுள்ளார். அப்போது காருக்குள் அபுதாகீர், மணிகண்டன், சசிகுமார் ஆகியோர் இருந்துள்ளனர்.

ஆசாத் பற்றி சசிகலா கேட்டதற்கு, உங்களிடம் பணம் வாங்க சொன்னார். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று அரிவாளை காட்டி காரில் இருந்தவர்கள் மிரட்டியுள்ளனர். பின்னர் சசிகலாவை மேட்டுப்பாளையத்துக்கு காரில் கடத்திச்சென்று அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்க வைத்துள்ளனர். பின்னர் 2-ந் தேதி அன்னூருக்கு காரில் அழைத்துச்சென்றுள்ளனர். அதன்பிறகு கருமத்தம்பட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஓட்டலில் தங்க வைத்துள்ளனர். சென்ற இடங்களில் எல்லாம் சசிகலாவிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை வாங்கி அதில் இருந்து ரூ.90 ஆயிரம் எடுத்துள்ளனர்.

அதன்பிறகு 3-ந் தேதி மாலை வரை சசிகலாவுக்கு சாப்பாடு எதுவும் கொடுக்காமல் ஓட்டலில் வைத்து மிரட்டியுள்ளனர். அதன்பிறகு அரிவாளால் அவரை வெட்ட முயன்றுள்ளனர். சசிகலா கீழே குனிந்து தப்பிவிட்டார். பின்னர் ஆசாத் கூறியபடி செல்கிறோம் என்று கூறி மதன், அபுதாகீர், மணிகண்டன், சசிகுமார் ஆகியோர் சசிகலாவை அந்த ஓட்டலில் விட்டு விட்டு காரில் புறப்பட்டு சென்று விட்டனர். பின்னர் அந்த ஓட்டலில் இருந்து சசிகலா வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவத்தால் மனரீதியாக பாதிக்கப்பட்ட சசிகலா நேற்று திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையிலான போலீசார், கடத்தல், கொலைமுயற்சி மற்றும் பெண்ணுக்கு எதிரான வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பத்ரிநாராயணன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையிலான தனிப்படை போலீசார் திருப்பூர் மும்மூர்த்தி நகரை சேர்ந்த அபுதாகீர்(29) மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அபுதாகீரின் தம்பியான பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த தஸ்தகீர்(28) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் ஆசாத் தனது நண்பர்களிடம் சசிகலாவுடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து கூறியுள்ளார். இதை பயன்படுத்தி அவருடைய நண்பர்கள் சசிகலாவை கடத்தி பணம் பறித்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story