அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகள் ஒதுக்கீடு - த.மா.கா.வுக்கு 4 வார்டுகள்


அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகள் ஒதுக்கீடு - த.மா.கா.வுக்கு 4 வார்டுகள்
x
தினத்தந்தி 13 Dec 2019 11:30 PM GMT (Updated: 13 Dec 2019 11:17 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகளும், த.மா.கா.வுக்கு 4 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தங்களின் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுடன் இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை திருப்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் முன்னிலை வகித்தார். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் முத்து வெங்கடேஷ்வரன் மற்றும் தே.மு.தி.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு இடஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டது.

அதன்படி திருப்பூர் ஒன்றியத்தில் 2-வது வார்டு, அவினாசி ஒன்றியத்தில் 4,9,17 ஆகிய வார்டுகள், பல்லடம் ஒன்றியத்தில் 1, 2 ஆகிய வார்டுகள், பொங்கலூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு, அன்னூர் ஒன்றியத்தில் 3, 4, 10 ஆகிய வார்டுகள் என மொத்தம் 10 வார்டுகளில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியில் தே.மு.தி.க. போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுபோல் த.மா.கா.வுடன் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு இடஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதன்படி அவினாசி ஒன்றியத்தில் 13-வது வார்டு, பல்லடம் ஒன்றியத்தில் 11-வது வார்டு, பொங்கலூர் ஒன்றியத்தில் 3-வது வார்டு, அன்னூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு ஆகிய 4 வார்டுகளில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியில் த.மா.கா. போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Next Story