புத்துணர்வு முகாமுக்கு செல்ல மணக்குள விநாயகர் கோவில் யானை தயார் - நாளை மறுநாள் அனுப்ப ஏற்பாடு


புத்துணர்வு முகாமுக்கு செல்ல மணக்குள விநாயகர் கோவில் யானை தயார் - நாளை மறுநாள் அனுப்ப ஏற்பாடு
x
தினத்தந்தி 14 Dec 2019 12:21 AM GMT (Updated: 14 Dec 2019 12:21 AM GMT)

மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமுக்கு நாளை மறுநாள் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளை லாரிகளில் ஏற்றப்பட்டு புத்துணர்வு முகாமுக்கு கொண்டு வருவார்கள். இயற்கையான வனப்பகுதிகளில் உலாவ விட்டு யானைகள் பராமரிக்கப்படும்.

இந்த ஆண்டு யானைகள் புத்துணர்வு முகாம் வருகிற 17-ந்தேதி தொடங்கி 48 நாட்கள் நடக்கிறது. இந்த முகாமுக்கு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியும் அழைத்துச் செல்லப்படுகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு யானையை கால்நடைத்துறை டாக்டர்கள் செல்வராஜ், குமரன் வாசுதேவன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதாவது யானையின் சளி, சிறுநீர், சாணம் ஆகியவை மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. பின்னர் தடுப்பூசியும் போடப்பட்டு யானை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

புத்துணர்வு முகாமுக்கு யானை லட்சுமி செல்வதையொட்டி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை மணக்குள விநாயகர் கோவிலில் கஜபூஜை நடக்கிறது. மாலையில் தாவரவியல் பூங்காவிற்கு யானை கொண்டு வரப்பட்டு லாரியில் ஏற்றி புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் கோவில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Next Story