டிப்ளமோ முடித்த சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


டிப்ளமோ முடித்த சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:30 PM GMT (Updated: 14 Dec 2019 2:42 PM GMT)

டிப்ளமோ முடித்த சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி வழங்க வேண்டும் என்று அச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதற்கு சங்க மாநில தலைவர் சுரேஷ் தலைமை தாங்கி பேசினார். மாநில துணைத் தலைவர் குலோத்துங்கன், பெரம்பலூர் வட்ட பிரதிநிதி சூரியகுமார், கோட்ட பொருளாளர் ஏ.ஆர். செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் திருமுருகன் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். பொருளாளர் வி.செல்வராஜ் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் சங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பதவி உயர்வு

கூட்டத்தில் 2006-ம் ஆண்டுக்கு முந்தைய நிலையில் உள்ளதை போல சாலை ஆய்வாளர்கள் அனைவருக்கும் சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை ஊதிய மாற்றம் செய்து வழங்க வேண்டும். இளநிலை தொழில் வரைவாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். டிப்ளமோ முடித்த சாலை ஆய்வாளர்கள் அனைவருக்கும் இளநிலை பொறியாளர் பதவி வழங்க வேண்டும்.

2018-ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மிதிவண்டி படியை மாற்றி வாகன படியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் கோட்ட செயலாளர் நீலமேகம் வரவேற்றார். முடிவில் கோட்டத் தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.


Next Story