எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கம் வெளிநாட்டினருக்கு மட்டும் அனுமதியா? பயணிகள் ஆதங்கம்
164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்டது. இதில், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதித்ததற்கு தமிழக பயணிகள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
சென்னை,
இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட பெய்ரி குயின் ஈ.ஐ.ஆர்-21 ரக நீராவி என்ஜின் ரெயிலை 1855-ம் ஆண்டு கப்பல் மூலம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்கு கொண்டு வந்தது. இந்த நீராவி என்ஜின் ரெயில் 1855-ம் ஆண்டு தனது சேவையை தொடங்கி 1909-ம் ஆண்டு சேவையை நிறுத்திக்கொண்டது. அதன் பிறகு இந்த நீராவி என்ஜின் ரெயில், கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இந்த ரெயிலை தெற்கு ரெயில்வே, சுற்றுலாவை மேம்படுத்தவும், பொதுமக்கள் பார்வைக்காக இயக்கத் திட்டமிட்டது. அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு நீராவி என்ஜின் ரெயிலை மீண்டும் இயக்கும் வண்ணம், புதுபித்து தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் பார்வைக்காக இயக்கப்பட்டது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
இந்த நிலையில் சனிக் கிழமை(நேற்று) எழும்பூர்- கோடம்பாக்கம் இடையே நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது. மேலும் என்ஜினில் இணைக்கப்பட்ட பெட்டியில் 40 இருக்கைகள் உள்ளன என்றும், அதில் பயணிகள் பயணிக் கலாம் என்றும், அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய சிறப்பு கவுண்ட்டர்கள் திறக் கப்படும் என்றும் அறிவித்தது. அறிவிப்பு படி நேற்று நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டது. அதில் பயணம் செய்ய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அளிக் கப்பட்டது.
இந்த ரெயிலை மத்திய ரெயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் உடன் இருந்தனர். ரெயில் பயணம் குறித்து பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
நாங்கள் இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்த போது, பாரம்பரியமிக்க பழமையான இந்த நீராவி என்ஜின் ரெயிலில் பயணிக்க வேண்டும் என நினைத்தோம். அதன்படி நாங்கள் தெற்கு ரெயில்வேயை தொடர்பு கொண்டு மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டோம். 164 ஆண்டுகள் பழமையான இந்த நீராவி என்ஜின் ரெயிலில் பயணம் செய்தது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது, என்றனர்.
ஏமாற்றத்தை அளித்துள்ளது
இந்த ரெயில், பயணிகளுக்கு புது அனுபவத்தை அளிப்பதற்காக இயக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நீராவி என்ஜின் ரெயிலில் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் பயணிக்கவில்லை. 99 சதவீதம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், ரெயில்வே ஊழியர்களும், அதிகாரிகளுமே இருந்தனர். மேலும் ரெயில் நிலையத்தில் வேடிக்கை பார்க்க ஆர்வமாக வந்த பொதுமக்கள் மற்றும் மற்ற பயணிகளை ரெயிலில் ஏறி சுற்றி பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து ரெயில் நிலையத்தில் இருந்த பயணி ஜெனிபா கூறியதாவது:-
நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்படுவது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் ரெயில் நிலையத்தில் இல்லை. இதற்கான சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்களும் அமைக்கப்படவில்லை. ஆனால் அதிகாரிகளிடம் கேட்ட போது டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைத்தோம், டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டன என்றனர்.
இந்த ரெயிலில் பயணிக்க வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த முறையும் நீராவி என்ஜின் ரெயிலில் பயணிக்க முடியாதது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story