அரவக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி மற்றொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


அரவக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி மற்றொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 15 Dec 2019 4:00 AM IST (Updated: 15 Dec 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரவக்குறிச்சி,

தர்மபுரியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 43). அதே பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (43). முன்னாள் ராணுவ வீரர். இவர்கள் 2 பேரும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் நேற்று முன்தினம் காலை தர்மபுரியில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பெத்தான்கோட்டை பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த மற்றொரு கார், பழனிவேல் ஓட்டிச் சென்ற காரின் பின்பகுதியில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பழனிவேல் ஓட்டி சென்ற கார் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

பக்தர் பலி

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய மாதேஸ்வரன், பழனிவேல் ஆகியோர் படுகாயமடைந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அபய குரல் எழுப்பினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காரின் இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும், பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிவேல் பரிதாபமாக இறந்தார். மாதேஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மற்றொரு கார் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story