நெல்லை, தென்காசியில் பரவலாக மழை: குற்றாலம்-அகஸ்தியர் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் மற்றும் அகஸ்தியர் அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 108 அடியாக உயர்ந்தது.
நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக மீண்டும் வெயில் அடிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரளா மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது.
நெல்லையில் காலை 11 மணியளவில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. அதன்பிறகு அவ்வப்போது லேசான மழை பெய்தது. இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தொடர் மழையால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உச்சநிலையில் நீடித்து வருகிறது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 142.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,467 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 909 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 155.41 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மீண்டும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 1,124 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 107.55 அடியில் இருந்து நேற்று 108.40 அடியாக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகள் தொடர்ந்து நிரம்பிய நிலையிலேயே காணப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் மாலை 3 மணிக்கு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து அவர்கள் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் நேற்று வெயில் இல்லை. லேசான சாரல் மழை தூறியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை குறைந்ததால் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முன்தினம் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென பெய்த பலத்த மழையால் அகஸ்தியர் அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அகஸ்தியர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் நேற்று தடை விதித்தனர். மேலும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம் -29, சேர்வலாறு -41, மணிமுத்தாறு -60, கொடுமுடியாறு -10, அம்பை -23, சேரன்மாதேவி -7, நாங்குநேரி -13.
தென்காசி மாவட்டம் கடனாநதி அணை -3, ராமநதி அணை -8, கருப்பாநதி -4, குண்டாறு -2, அடவிநயினார் -2, ஆய்குடி -3, சங்கரன்கோவில் -3, செங்கோட்டை -2, சிவகிரி -3, தென்காசி -5.
Related Tags :
Next Story