அழகியமண்டபம் பகுதியில் அதிகபாரம் ஏற்றி வந்த 15 லாரிகள் பறிமுதல் ரூ.3 லட்சம் அபராதம்


அழகியமண்டபம் பகுதியில் அதிகபாரம் ஏற்றி வந்த 15 லாரிகள் பறிமுதல் ரூ.3 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 15 Dec 2019 4:30 AM IST (Updated: 15 Dec 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

அழகியமண்டபம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த 15 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.3லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டத்தில் கனரக லாரிகளில் ஜல்லி, எம் சாண்ட், கருங்கல் போன்ற கனிமவள பொருட்கள் அதிக அளவில் எடுத்து செல்லப்படுவதாகவும், இதனால் சாலைகள் சேதமடைந்து விபத்துகள் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து போக்குவரத்து ஆணையர் ஜவகர் உத்தரவின்படி மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் நேற்று அதிகாலையில் அழகியமண்டபம், முளகுமூடு, தக்கலை போன்ற பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக லாரிகளில் அளவுக்கு அதிகமாக எம் சாண்ட், ஜல்லி, மணல் ஏற்றி வந்த 15 லாரிகளை பறிமுதல் செய்தனர். அவற்றுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆம்னி பஸ்கள்

மேலும் உரிய வரி செலுத்தாமல் இயங்கிய கேரள, பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்து அவற்றுக்கு தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தக்கலை அருகே கோழிப்போர்விளை பகுதியில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதுபோன்ற சோதனை தொடரும் எனவும், விதிமுறை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தெரிவித்தார்.


Next Story