புதுவை அருகே குளித்த போது கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் கடல் அலையில் சிக்கினர் - ஒருவர் சாவு; 3 பேர் மீட்பு


புதுவை அருகே குளித்த போது கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் கடல் அலையில் சிக்கினர் - ஒருவர் சாவு; 3 பேர் மீட்பு
x
தினத்தந்தி 15 Dec 2019 4:45 AM IST (Updated: 15 Dec 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அருகே கடலில் குளித்த போது அலையில் சிக்கிய கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் 3 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் பலியானார்.

புதுச்சேரி, 

புதுவைக்கு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் 8 பேர் நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர்.

இங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், புதுச்சேரி அருகே உள்ள தந்திராயன்குப்பத்தில் ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். நேற்று காலை தந்திராயன்குப்பம் கடற் கரைக்கு சென்றனர். அவர்களில் பெங்களூரு கிரி நகரைச் சேர்ந்த திபு (வயது 26), பெண் என்ஜினீயர்களான பவித்ரா (24), சஹானா (23), தனுஸ்ரீ (24) ஆகிய 4 பேர் மட்டும் கடலில் இறங்கி குளித்தனர். மற்ற 4 பேரும் கடற்கரையில் அமர்ந்திருந்தனர்.

இந்தநிலையில் கடலில் திடீரென எழுந்த ராட்சத அலை குளித்துக் கொண்டிருந்த என்ஜினீயர்கள் 4 பேரையும் வாரிச்சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றது.

அதைப் பார்த்ததும் கடற்கரையில் இருந்த அவர்களின் நண்பர்கள் 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். உதவி கேட்டு கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு தந்திராயன்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் அங்கு ஓடி வந்தனர்.

கடல் அலையில் சிக்கியவர்களை மீட்பதற்காக படகுடன் கடலுக்குள் சென்றனர். கடலில் குதித்து அலையில் சிக்கிய 4 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்கள் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திபு பரிதாபமாகச் செத்தார்.

பவித்ரா, சஹானா, தனுஸ்ரீ ஆகிய 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பவித்ராவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

கடல் அலையில் என்ஜினீயர்கள் சிக்கிய சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திபு கடலில் மூழ்கி பலியானது குறித்து அவருடைய பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதை அறிந்து அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். திபுவின் உடலை பெற்றுச் செல்வதற்காக பெங்களூருவில் இருந்து அவர்கள் புதுச்சேரிக்கு புறப்பட்டனர்.

Next Story