குடியுரிமை சட்டத்தை எதிர்த்து - மும்பையில் அசாம் மக்கள் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை சட்டத்தை எதிர்த்து - மும்பையில் அசாம் மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:30 PM GMT (Updated: 14 Dec 2019 8:36 PM GMT)

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மும்பையில் அசாம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மும்பை,

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து உள்ளது. இது, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.

இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட கிழக்கு மாநிலங்களில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மும்பை ஆசாத் மைதானத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மும்பையில் வசித்து வரும் அசாம் மாநில மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறும்போது, “ அசாமில் வந்து வெளிநாட்டினர் தங்கும் பிரச்சினை தொடர்பாக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது அவர்களுக்கு குடியுரிமை வழங்கினால் எங்கள் நிலைமை இன்னும் மோசமாகும். வெளிநாட்டினருக்கு இடம் கொடுத்தால் நாங்கள் பாதிக்கப்படுவோம். ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எங்கள் இடத்தை எடுத்து கொண்டனர். தற்போது நாங்கள் ஒன்றும் இல்லாமல் உள்ளோம்” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை தீபன்னிதா சர்மா அவரது டுவிட்டர் பக்கத்தில், “எங்கள் போராட்டத்தை போல அமைதியான, வன்முறை இல்லாத இயல்பு வாழ்க்கை அசாமில் திரும்ப வேண்டும் என விரும்புகிறோம்” என கூறியுள்ளார்.

Next Story