மக்கள் நீதிமன்றம் மூலம் 1,794 வழக்குகளுக்கு தீர்வு முதன்மை நீதிபதி தலைமையில் விசாரணை நடந்தது


மக்கள் நீதிமன்றம் மூலம் 1,794 வழக்குகளுக்கு தீர்வு முதன்மை நீதிபதி தலைமையில் விசாரணை நடந்தது
x
தினத்தந்தி 15 Dec 2019 4:00 AM IST (Updated: 15 Dec 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 1,794 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி என்.உமாமகேஸ்வரி தலைமையில் விசாரணை நடந்தது.

ஈரோடு,

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று நாடு முழுவதும் மெகா லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதன்படி ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், கொடுமுடி என அனைத்து கோர்ட்டுகளிலும் 21 குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் நீதிமன்ற வழக்குகள் விசாரிக்கப்பட்டன. சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 34 ஆயிரத்து 394 வழக்குகளில் 6 ஆயிரத்து 896 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

குற்ற நடைமுறை வழக்குகள் 151, செக்மோசடி வழக்குகள் 2 ஆயிரத்து 232, வங்கி கடன் வழக்குகள் 618, மோட்டார் வாகன சட்ட வழக்குகள் 1,594, தொழிலாளர் நல வழக்குகள் 20, குடும்ப நல வழக்குகள் 293, சிவில் வழக்குகள் 969, மின்சார வாரியம், மாநகராட்சி தொடர்பான வழக்குகள் 269, பிற குற்ற வழக்குகள் 750 என வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

நீதிபதிகள்

ஈரோடு சம்பத்நகர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் 9 குழுக்கள் வழக்கு விசாரணையில் ஈடுபட்டன. மக்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி என்.உமா மகேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

மகளிர் கோர்ட்டு நீதிபதி ஆர்.மாலதி, 1-ம் கூடுதல் மாவட்ட முனிசீப் ஜி.சிவக்குமார் ஆகியோர் ஒரு குழுவாக வழக்குகளை விசாரித்தனர். 2-ம் கூடுதல் மாவட்ட நீதிபதி கே.சுதா, சிறப்பு மாவட்ட நீதிபதி பி.பார்த்தசாரதி, சிறப்பு சார்பு நீதிபதி பி.மோகனவள்ளி ஆகியோர் ஒரு குழுவாக இயங்கினர்.

குடும்பநல கோர்ட்டு நீதிபதி எஸ்.ஜெயந்தி, 2-வது கூடுதல் சார்பு நீதிபதி ஆர்.செந்தில்குமார் ராஜவேல், 2-ம் கூடுதல் மாவட்ட முனிசீப் ஆர்.ஹரிஹரன் ஆகியோர் ஒரு குழுவிலும், முதன்மை சார்பு நீதிபதி கே.ஹரிஹரன், முதன்மை மாவட்ட முனிசீப் எம்.தனபால் ஒரு குழுவிலும் விசாரணை நடத்தினார்கள்.

சமரச தீர்வு

ஈரோடு மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கே.ஆர்.ஜோதி, விரைவு கோர்ட்டு எண்-2 ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எஸ்.தமிழ்ச்செல்வி, 1-ம் எண் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு பி.எஸ்.கலைவாணி, 2-ம் எண் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ஜெ.நாகலட்சுமி என்கிற விஜயராணி, 3-ம் எண் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ஏ.சரண்யா ஆகியோர் தலைமையில் தனித்தனி குழுக்களும் வழக்குகளை விசாரித்தன. இந்த குழுக்களில் வக்கீல்கள், கோர்ட்டு அலுவலர்கள் இருந்தனர். வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டன.

காசோலை

ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி ஆர்.மாலதி தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் சமரச தீர்வு காணப்பட்ட ஒரு வழக்கில், கடன் தொகை ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் திரும்ப பெற்று பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி என்.உமாமகேஸ்வரி உரியவர்களிடம் வழங்கினார்.

1,794 வழக்குகள்

நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட 6 ஆயிரத்து 896 வழக்குகளில் 1,794 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.19 கோடியே 34 லட்சத்து 9 ஆயிரத்து 72 பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சார்பு நீதிபதியும் ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான எஸ்.லட்சுமி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்து இருந்தனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் உள்ள சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றம் ஆகிய 3 நீதிமன்றங்களில் உள்ள 300 வழக்குகளை கோவை மாவட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ராமராஜன், சத்தியமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில் விபத்துகள், வங்கி கடன்கள் உள்பட பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 கோடியே 53 லட்சத்து 34 ஆயிரத்து 358 இழப்பீடாக வழங்கப்பட்டது.

Next Story