ஊருக்குள் புகுந்து புலி அட்டகாசம்; கன்றுக்குட்டியை கடித்துக்கொன்றது கிராம மக்கள் பீதி


ஊருக்குள் புகுந்து புலி அட்டகாசம்; கன்றுக்குட்டியை கடித்துக்கொன்றது கிராம மக்கள் பீதி
x
தினத்தந்தி 14 Dec 2019 10:45 PM GMT (Updated: 14 Dec 2019 8:55 PM GMT)

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த புலி கன்றுக்குட்டியை கடித்துக்கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை வனச்சரகத்தில் புலி, மான், சிறுத்தை, யானை, கரடி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகின்றன. மேலும் புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வீடு, தோட்டம் முன்பு கட்டப்பட்டிருக்கும் கால்நடைகளை அடித்துக்கொன்று வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.

கன்றுக்குட்டியை காணவில்லை

தாளவாடி அருகே உள்ள தலமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாபுரம் காந்திநகர் கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சைய்யா. விவசாயி. தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு் இரவு வீட்டின் முன்பு அவற்றை கட்டி வைத்தார். அதன்பின்னர் தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை அவர் பார்த்த போது வீட்டு முன்பு கட்டப்பட்டிருந்த ஒரு கன்றுக்குட்டியை காணவில்லை.

உடல் கிடந்தது

இதனால் கன்றுக்குட்டியை அவர் உறவினர்களுடன் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தார். அப்போது அருகே உள்ள மானாவாரி நிலத்தில் கன்றுக்குட்டியின் உடல் 2 துண்டு்களாக கிடந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி நஞ்சைய்யா தலமலை வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் தொட்டாபுரம் காந்திநகர் பகுதிக்கு சென்று அங்கு பதிவான விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். அது புலியின் கால்தடம் என்பதை கண்டுபிடித்தனர்.

புலி கடித்துக்கொன்றது

வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய புலி ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. பின்னர் நஞ்சைய்யா வீட்டு் முன்பு கட்டப்பட்டிருந்த ஒரு கன்றுக்குட்டியை வாயால் கவ்வி அருகே உள்ள மானவாரி நிலத்துக்கு இழுத்து சென்றுள்ளது. அங்கு வைத்து கன்றுக்குட்டியை கடித்துக்கொன்று தின்றுவிட்டு உடலை அங்கேயே போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

கிராம மக்கள் பீதி

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘தாளவாடி மலைப்பகுதியில் தொடர்ந்து கால்நடைகளை வனவிலங்குகள் வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. இது எங்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் வனத்துறையினர் கடந்த 6 மாதங்களாக இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், வனவிலங்குகள் ஊருக்குள் புகாதவாறும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Next Story