சென்னையில் இன்று கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கம் பகுதியில் 5 சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் இன்று கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி, சேப்பாக்கம் பகுதியில் 5 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிரிக்கெட் போட்டி
இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் முதலாவது ஒரு நாள் பகல் - இரவு கிரிக்கெட் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் 15-ந் தேதி (இன்று) நடைபெறுவதை முன்னிட்டு 5 சாலைகளில் பகல் 12.30 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மாநகர பஸ்களுக்கு அனுமதி
பெல்ஸ் சாலை:- இந்த சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்லவும் பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல தடை செய்தும், செயல்படுத்தப்படும். கிரிக்கெட் விளையாட்டு முடிந்தவுடன், அதாவது வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரதி சாலை:- காமராஜர் சாலையில் இருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்களில், மாநகர பஸ்கள் மற்றும் உரிய அனுமதி சீட்டு ஒட்டப்பட்ட வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
கெனால் சாலை:- இந்த சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லவும் வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல தடை செய்தும், செயல்படுத்தப்படும்.
வாலாஜா சாலை:- அண்ணா சாலையில் இருந்து வரும் எம், பி, டி, டபிள்யூ எழுத்துகள் ஒட்டப்பட்ட அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை வழியாக அனுமதிக்கப்படும்.
கடற்கரை சாலையில் வாகனம் நிறுத்தலாம்
பி மற்றும் ஆர் எழுத்துகள் ஒட்டப்பட்ட அனுமதி பெற்ற வாகனங்கள் பெல்ஸ் சாலை செல்லாமல் அவ்வாகனங்கள் எம்.ஆர்.டி.எஸ். மற்றும் பட்டாபிராம் நுழைவாயில் சென்று வாகன நிறுத்துமிடம் செல்லலாம்.
காமராஜர் சாலை:- போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலையில் இருந்து வரும் எம், பி, டி, டபிள்யூ எழுத்துகள் ஒட்டப்பட்ட அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள் பாரதி சாலை வழியாக கெனால் சாலை செல்லலாம், மற்ற வாகனங்கள் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை சாலையில் வாகனங்களை நிறுத்தலாம்.
அனுமதி சீட்டு இல்லாமல் வரும் வாகனங்கள்:- அண்ணா சாலையில் இருந்து வரும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை சென்று கடற்கறை சாலையிலும் சுவாமி சிவானந்தா சாலையிலும் வாகனங்களை நிறுத்தலாம்.
போர் நினைவு சின்னம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் சென்று சர்வீஸ் ரோடு சாலையிலும், சுவாமி சிவானந்தா சாலையிலும் வாகனங்களை நிறுத்தலாம். காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று சர்வீஸ் ரோடு சாலையிலும், சுவாமி சிவானந்தா சாலையிலும் வாகனங்களை நிறுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story