காஞ்சீபுரத்தில் மருத்துவ கல்லூரிக்காக 25 ஏக்கர் நிலம் தேர்வு அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி வைப்பு


காஞ்சீபுரத்தில் மருத்துவ கல்லூரிக்காக 25 ஏக்கர் நிலம் தேர்வு அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 14 Dec 2019 11:53 PM GMT (Updated: 14 Dec 2019 11:53 PM GMT)

காஞ்சீபுரத்தில் மருத்துவ கல்லூரிக்காக 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் தற்போது ஆஸ்பத்திரியுடன் இணைந்த 24 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகளைத் தொடங்க கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசிடம் அனுமதி பெற்றது. தொடர்ந்து அங்கு கல்லூரி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதற்கு பின்னர் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை என 3 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன. ஏற்கெனவே இந்த ஆண்டில் 9 கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ள நிலையில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திட்ட அறிக்கை

இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பும்படி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டிருந்தது. தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் மற்றும் பல்வேறு அதிகாரிகள் குழுவினர், காரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். முடிவில் காரை பகுதியில் மருத்துவ கல்லூரியை அமைக்க முடிவு செய்தனர். அங்கு 25 ஏக்கரில் மருத்துவ கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் ரூ.385 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஜீவா கூறியதாவது:-

காஞ்சீபுரத்தில், மருத்துவ கல்லூரி அமைக்க காரை கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான திட்ட அறிக்கையை பொதுப்பணித்துறையிடம் இருந்து மாவட்ட கலெக்டர் பெற்று அரசுக்கு அனுப்பியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story