ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு ஆட்கள் தேர்வு 46 பணியிடத்துக்கு 4 ஆயிரம் பேர் குவிந்தனர்


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு ஆட்கள் தேர்வு 46 பணியிடத்துக்கு 4 ஆயிரம் பேர் குவிந்தனர்
x
தினத்தந்தி 16 Dec 2019 4:30 AM IST (Updated: 15 Dec 2019 10:37 PM IST)
t-max-icont-min-icon

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் 46 பணியிடங்களுக்கு 4 ஆயிரம் பேர் குவிந்தனர். இதில் இந்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால் தேர்வில் கலந்து கொண்ட தமிழக இளைஞர்கள் விரக்தி அடைந்தனர்.

செம்பட்டு,

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சார்பில் 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்று வதற்காக தென் மண்டல அளவில் ஆட்கள் தேர்வு நடைபெற்றது. செம்பட்டு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற இந்த நேர்காணலில் வாடிக்கையாளர் முகவர், பொருட்களை கையாளும் ஆண்கள், பெண்கள், ஏர் இந்தியா விமான நிலைய வாகன பராமரிப்பு மற்றும் கையாளுதல், டிரைவர் என்று 46 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்காக எஸ்.எஸ்.எல்.சி. முதல் பட்டப்படிப்பு வரை படித்து முடித்தவர்கள் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில் பெரும்பாலானோர் பி.இ., எம்.இ. முடித்த என்ஜினீயரிங் பட்டதாரிகளாக இருந்தனர். நேர்காணல் நடைபெறும் பகுதியில் எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்திக்கு முன்னுரிமை

இந்த நேர்முக தேர்வில் தமிழர்களுக்கு என்று தனியாக முன்னுரிமை வழங்கப்படவில்லை. ஆனால் இந்தி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழக இளைஞர்கள் விரக்தி அடைந்தனர்.

இந்த நேர்முக தேர்வில் இந்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருந்ததால், வட மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் தகுதிபெற்றனர் என்றும், தங்களால் தேர்வு பெற முடியவில்லை என்றும் நேர்முக தேர்வில் கலந்து கொண்ட தமிழக இளைஞர்கள் குற்றம் சாட்டினார்கள்.

Next Story