குளித்தலை அருகே 4 மாத கர்ப்பிணி மர்மசாவு உறவினர்கள் சாலை மறியல்


குளித்தலை அருகே 4 மாத கர்ப்பிணி மர்மசாவு உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Dec 2019 4:30 AM IST (Updated: 15 Dec 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே 4 மாத கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கீழ்நங்கவரம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 28). இவரது மனைவி சிவரஞ்சனி (22). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் சிவரஞ்சனி 4 மாத கர்ப்பமாக இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று சிவரஞ்சனி தூக்குப்போட்டு இறந்து விட்டதாகவும், அவரது உடலை ரெங்கராஜ் குடும்பத்தினர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக, பெரம்பலூரில் உள்ள சிவரஞ்சனியின் உறவினர் களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அலறி துடித்து கொண்டு சிவரஞ்சனியின் உறவினர்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர்.

சாலை மறியல்

பின்னர் சிவரஞ்சனியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்த ரெங்கராஜ் குடும்பத்தினர் அடித்து கொலை செய்து விட்டதாகவும், இதனால் அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் எனக்கூறி, குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் சிவரஞ்சனியின் இறப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதவி கலெக்டர் விசாரணை

இதையடுத்து சிவரஞ்சனியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிவரஞ்சனியின் தாய் பாசமலர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவரஞ்சனிக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் குளித்தலை உதவி கலெக்டர் சேக் அப்துல் ரகுமானும் விசாரணை நடத்தி வருகிறார். 4 மாதகர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story