சிறுபாக்கம் அருகே மரத்தில் பஸ் மோதல்: வியாபாரி உடல் நசுங்கி பலி; 17 பேர் படுகாயம்
சிறுபாக்கம் அருகே மரத்தில் பஸ் மோதியதில் வியாபாரி உடல் நசுங்கி பலியானார். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
சிறுபாக்கம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு பஸ் ஒன்று விருத்தாசலம், சிறுபாக்கம் வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை சேலத்தை சேர்ந்த கரிகாலன் (வயது 41) என்பவர் ஓட்டினார். தர்மபுரியை சேர்ந்த இளையராஜா என்பவர் கண்டக்டராக இருந்தார்.
நள்ளிரவு 1.30 மணி அளவில் சிறுபாக்கம் அடுத்த அடரியில் கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த வெள்ளி நகைகளை வாங்கி விற்கும் வியாபாரியான சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள சோழபள்ளத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கோவிந்தராஜ்(53) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி சீர்காழியை சேர்ந்த சந்திரா(40), சங்கர்(45), சக்திவேல்(32), தர்மபுரியை சேர்ந்த சாரங்கபாணி(45), விஜய்(35), மணிகண்டன்(25), வசந்தி(73), கணேசன்(50), சாமிதுரை(32), ராஜா(42), சாந்தகுமார்(17) உள்ளிட்ட 17 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சிறுபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த சந்திரா, சங்கர் உள்ளிட்ட 17 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே விபத்தில் பலியான கோவிந்தராஜ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் டிரைவர் கரிகாலன், கண்டக்டர் இளையராஜா ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Related Tags :
Next Story