போலீஸ் நிலையங்கள் நீதிமன்றங்களாக மாறிவிடக்கூடாது: வழக்கை விசாரித்து தண்டனை கொடுப்பது கோர்ட்டின் பொறுப்பு - ஐகோர்ட்டு நீதிபதி பாரதிதாசன் பேச்சு


போலீஸ் நிலையங்கள் நீதிமன்றங்களாக மாறிவிடக்கூடாது: வழக்கை விசாரித்து தண்டனை கொடுப்பது கோர்ட்டின் பொறுப்பு - ஐகோர்ட்டு நீதிபதி பாரதிதாசன் பேச்சு
x
தினத்தந்தி 16 Dec 2019 4:00 AM IST (Updated: 16 Dec 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையங்கள் நீதிமன்றங்களாக மாறிவிடக்கூடாது. ஒரு வழக்கை விசாரித்து தண்டனை கொடுப்பது கோர்ட்டின் பொறுப்பு என்று ஐகோர்ட்டு நீதிபதி பாரதிதாசன் பேசினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் ரூ.4.88 கோடி செலவில் புதிய கோர்ட்டு விரிவாக்க கட்டிடம் திறப்பு விழா, குடும்ப நல கோர்ட்டு, போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு, 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஆகிய கோர்ட்டுகளின் தொடக்க விழா மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் நேற்று நடந்தது.

விழாவுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாக நீதிபதியுமான வி.பாரதிதாசன் தலைமை தாங்கி, புதிய கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் புதிய கோர்ட்டுகளையும் தொடங்கி வைத்தார். ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஏ.டி.ஜெகதீ‌‌ஷ் சந்திரா, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை நீதிபதி என்.லோகேசுவரன் வரவேற்று பேசினார்.

விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி வி.பாரதிதாசன் பேசியதாவது:-

ஏழை, எளிய மக்களுக்கு விரைவாக, அதே நேரத்தில் எளிதாக கோர்ட்டை அணுக வேண்டும் என்பதற்காக தாலுகா வாரியாக உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், இரண்டும் இணைந்த நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகம் வருகின்றன. இது வரவேற்கக்கூடிய வி‌‌ஷயம் இல்லை. ஆனாலும் வழக்குகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்ற வகையில் குடும்பநல கோர்ட்டு திறக்கப்பட்டு உள்ளது. இளம்சிறார்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கவும் கோர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது. நாங்கள் கோர்ட்டை தான் திறந்து வைத்து இருக்கிறோம். ஆனால் வழக்குகள் வராமல் பார்த்துக்கொள்வது உங்கள் கடமை. சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பது சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத செயல் ஆகும்.

கோர்ட்டுகளில் வழக்குகள் அதிகமாக தேங்கி உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. இதற்கு யார் காரணம் என்று பார்த்தால், கோர்ட்டு மட்டும் காரணம் அல்ல. பல்வேறு காரணங்கள் உள்ளன. தென்மண்டலத்தில் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் இருப்பதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். அதில் இருந்து காலதாமதம் தொடங்குகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபிறகு, அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாத வழக்குகளும் அதிக அளவில் உள்ளன. அதன்பிறகு கோர்ட்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யாமலும் உள்ளன. வழக்கு விசாரணையின் போது, சாட்சிகளை ஆஜர்படுத்துவதிலும் தாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு நிலையிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் கோர்ட்டை மட்டும் குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஒரு மனிதனை குற்றவாளியா, இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரமும், பொறுப்பும் கோர்ட்டுக்குத்தான் உள்ளது. சட்டத்தின் வழியாக, சாட்சிகளை ஆராய்ந்து, இந்த மனிதன் குற்றம் செய்தவனா? நிரபராதியா? குற்றம் செய்து இருந்தால் என்ன தண்டனை கொடுப்பது என்ற பொறுப்பு எல்லாம் கோர்ட்டுக்குத்தான் உள்ளது. கோர்ட்டை தவிர வேறு யாரும் அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டு செய்ய முடியாது. செய்யவும் கூடாது. போலீஸ் நிலையங்கள் கோர்ட்டாக மாறிவிடக்கூடாது. போலீசார் நீதிபதிகளாக மாறிவிடக்கூடாது. அப்படி மாறிவிட்டால் இங்கு சட்டத்தின் ஆட்சி இருக்காது. ஜனநாயகம் இருக்காது.

மூத்த வக்கீல்கள், இளம் வக்கீல்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இளம் வக்கீல்கள் மூத்த வக்கீல்களிடம் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். உழைப்பு இல்லாமல் முன்னேற முடியாது. வக்கீல்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசும்போது, காலியாக உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதேபோன்று காலியாக உள்ள கோர்ட்டு ஊழியர்களும் நியமிக்கப்படுவார்கள். கோர்ட்டு சிறப்பாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனைதான் வக்கீல்களுக்கும், வக்கீல் சங்கத்துக்கும் இருக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும். பொதுமக்களுக்கு கோர்ட்டு மீது எவ்வளவு நம்பிக்கை உள்ளதோ, அப்போதுதான் கோர்ட்டு தனித்து இயங்க முடியும் என்றார்.

ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீ‌‌ஷ் சந்திரா பேசும்போது, ஒரு நல்ல தாய் நல்ல குழந்தையை உருவாக்குகிறார். அது போன்றுதான் நல்ல வக்கீல் சங்கம் இருந்தால்தான், நீதிபதிகள் நல்ல தீர்ப்பை வழங்க முடியும். அப்படிப்பட்ட சிறப்பை கொண்டது தூத்துக்குடி வக்கீல் சங்கம். அதற்கு நீங்கள் உங்களை தயார்படுத்த வேண்டும். வக்கீல் சங்கத்தில் உள்ள நூலகத்தை நீங்கள் புதுப்பிக்க வேண்டும் என்றார்.

விழாவில் நீதிபதிகள் சிவஞானம், சி.குமார் சரவணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சாமுவேல் பெஞ்சமின், சார்பு நீதிபதிகள் மாரீசுவரி, அகிலாதேவி, பரமேசுவரி, ஸ்ரீவைகுண்டம் முன்சீப் கோர்ட்டு நீதிபதி ஜெயசுதா மற்றும் மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல் சங்க இடைக்கால கமிட்டி தலைவர் திலக், உறுப்பினர் சொக்கலிங்கம், வக்கீல் சுப்பிரமணிய ஆதித்தன், ஸ்ரீவைகுண்டம் வக்கீல் சங்க உறுப்பினர்கள் ஆறுமுகபெருமாள், கருப்பசாமி, அரசு வக்கீல்கள் யு.எஸ்.சேகர், ஆண்ட்ரூமணி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி டீன் திருவாசகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா நன்றி கூறினார்.

Next Story