விவசாயத்தை பெருக்க அரசு முன்வர வேண்டும் கரூரில் நல்லசாமி பேட்டி


விவசாயத்தை பெருக்க அரசு முன்வர வேண்டும் கரூரில் நல்லசாமி பேட்டி
x
தினத்தந்தி 16 Dec 2019 4:30 AM IST (Updated: 16 Dec 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

விவசாயத்தை பெருக்க அரசு முன்வர வேண்டும் என கரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

கரூர்,

கரூரில் தமிழ்நாடு கள் இயக்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தமிழக விவசாயிகள் சங்க தலைவர் மாரப்பன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், நெடுஞ்சாலையோரங்களில் மதுக்கடைகளை அகற்ற வேண்டிய சூழல் கேரளாவில் ஏற்பட்ட போது உணவு பொருளான கள் விற்கும் கடைகளை மூட வேண்டியதில்லை என அறிவித்து அதற்கு ஆதரவு கொடுத்தது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடை இருப்பது ஏன்?. ஆனால் டாஸ்மாக் மதுக்களை அரசு விற்று வருகிறது. எனவே கள்ளுக்கும் தடையை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில அமைப்பாளர்கள் கதிரேசன், சிப்பி முத்துரெத்தினம், தமிழ்சேரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நல்லசாமி பேட்டி

முன்னதாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறுகையில், முன்பெல்லாம் அரசர்கள் ஆட்சி செய்தபோது விவசாயிகளிடம் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கினை பெற்றே ஆட்சி நடத்தப்பட்டது. ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருவது ஒரு தேசிய அவமானம் ஆகும். இந்தநிலையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கிறது. தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 கொடுக்க முன்வந்துள்ளது.

விவசாயிகளிடம் கையேந்திய ஆட்சியாளர்கள், தற்போது விவசாயிகளை கையேந்த வைத்து விட்டதை குறிக்கிறது. எனவே விவசாயத்தை பெருக்க அரசு முன்வர வேண்டும். கள்ளானது கேன்சர் நோய்க்கு மருந்தாக அமைவதால் அதனை உற்பத்தி செய்ய நிதிஒதுக்கீடு செய்து தெலுங்கானா அரசு முன்வந்துள்ளது. ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தில் மட்டும் கள் தடை ஏன்?. அதற்கு விலக்கு அளிக்க அரசு முன்வர வேண்டும். சிற்றூராட்சி வார்டு முதல் மாநகராட்சி மேயர் வரை சுயேச்சை சின்னங்களில் வேட்பாளர்களை போட்டியிட செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். அப்போது தான் அரசியல் கட்சிகள், பொதுமக்களுக்கு தேர்தலில் சமவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.


Next Story