வேலூர் கோட்டைக்குள் ‘பைக் ரேஸ்’ செல்வதை தடுக்க தடுப்புகள் அமைப்பு
வேலூர் கோட்டைக்குள், ‘பைக் ரேஸ்’ செல்வதை தடுக்க தொல்பொருள்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர்,
வேலூர் கோட்டைக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்கள் கோட்டையை சுற்றி பார்த்து செல்கிறார்கள். மேலும் கோட்டை மதில் சுவரில் உள்ள பாதையிலும், கோட்டைக்குள் உள்ள சுற்றுச்சாலையிலும் தினமும் காலையிலும், மாலையிலும் பெரும்பாலானவர்கள் நடைபயிற்சி செல்கிறார்கள்.
இதுதவிர இருசக்கர வாகனம், கார் ஓட்டி பழகுவதற்கும் இந்த பாதையை பயன்படுத்துகிறார்கள். இதனால் நடைபயிற்சி செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதோடு இளைஞர்கள் அவ்வப்போது இந்த பாதையில் ‘பைக்ரேஸ்’ நடத்துகின்றனர். இதனால் விபத்துகள் நடக்கும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து தொல்பொருள்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து ‘பைக் ரேஸ்’ செல்வதை தடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக தற்போது கோட்டைக்குள் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் சுற்றுச்சாலையில் பழைய தாலுகா அலுவலகம் அருகே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் வாகனங்கள் செல்ல முடியாத வகையிலும், நடந்து செல்வதற்கு வசதியாக இடைவெளி விட்டும் இந்த தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பாதையில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாது. நடைபயிற்சி செல்பவர்களுக்கு இது வசதியாக அமைந்துள்ளது.
Related Tags :
Next Story