மாஞ்சோலைக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் - தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை


மாஞ்சோலைக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் - தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Dec 2019 3:45 AM IST (Updated: 16 Dec 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

மாஞ்சோலைக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் உள்பகுதியில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி, கோதையாறு பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி இருந்து அங்குள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுடைய குழந்தைகள் மாஞ்சோலையில் உள்ள பள்ளியிலும், கல்லிடைக்குறிச்சி, அம்பை மற்றும் நெல்லையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர். இவர்களது வசதிக்காக நெல்லை, தென்காசியில் இருந்து மாஞ்சோலைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் மாஞ்சோலைக்கு செல்லும் பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது நெல்லையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு ஒரு பஸ் புறப்பட்டு 5 மணிக்கு மாஞ்சோலை செல்கிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பாபநாசம் பணிமனைக்கு செல்கிறது. மீண்டும் அதே பஸ் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு கோதையாறு செல்கிறது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு நெல்லையை அடைகிறது.

இதற்கு இடையே இயக்கப்பட்டு வந்த ஒரு பஸ்சும் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டு விட்டது. அதாவது தென்காசியில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு, கல்லிடைக்குறிச்சிக்கு 1.30 மணிக்கு வந்து, மாலை 4 மணிக்கு ஊத்து பகுதியை சென்றடைகிறது. அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு இரவு 8 மணிக்கு நெல்லையை அடைகிறது. அங்குள்ள தொழிலாளர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் இந்த பஸ் நிறுத்தப்பட்டு உள்ளது.

எனவே இந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று அங்குள்ள தொழிலாளர்கள் பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டு உள்ளனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘மாஞ்சோலைக்கு தற்போது ஒரேயொரு பஸ் மட்டும் 2 நடைகள் வந்து செல்கிறது. மேலும் ஒரு பஸ் நிறுத்தப்பட்டது குறித்து போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளிடம் முறையிட்டால், சாலை வசதி இல்லை, டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை உள்ளது என்று காரணம் காட்டுகின்றனர். அரசு பஸ்சை மட்டுமே நம்பி, நாங்கள் மலையில் வசித்து வருகிறோம். இந்த பஸ்சை மீண்டும் இயக்கினால் வங்கி சேவை உள்ளிட்ட வசதிகளுக்கு மிகவும் பயன் அளிக்கும். எனவே இந்த பஸ்சை மீண்டும் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Next Story