உள்ளாட்சி தேர்தலில் தோல்வி பயம் காரணமாக தி.மு.க. நீதிமன்றத்தை நாடுகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் தோல்வி பயம் காரணமாக தி.மு.க. நீதிமன்றத்தை நாடுகிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவில்பட்டி,
உள்ளாட்சி தேர்தலில் எந்தவித குளறுபடியும் இல்லை. ஏற்கனவே 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக்கு ஏற்ப வார்டுகள் மறுவரையறை செய்ய வேண்டும் என தி.மு.க. நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றம் வார்டுகள் மறுவரையறை செய்து தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதன்பின்னர் தேர்தல் ஆணையம், உள்ளாட்சி நிர்வாகமும் வார்டு மறுவரையறை செய்து, பட்டியல் தயாரித்தது. அதனை மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு தேர்தல் நடத்த தடையில்லை என தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. உறுப்பினர் பதவி முதல் தலைவர் பதவி வரை பொதுவார்டு, பெண்கள் வார்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வார்டுகள் என பட்டியல் தயாரித்து வெளிப்படையாக வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வளவு நடந்த பின்னரும் குழப்பம் என்று சொன்னால் மக்களை சந்திக்க தி.மு.க. பயந்து விட்டு, மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறது. உள்ளாட்சி தேர்தல் தோல்வி பயம் காரணமாக அவர்கள் மக்கள் மன்றத்தை சந்திப்பதற்கு பதிலாக நீதிமன்றத்தை சந்திக்கிறார்கள்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல், ஏலத்தின் மூலம் பதவி விடப்பட்டால் அது செல்லாது. அதற்கு துணை போகக்கூடாது என தேர்தல் ஆணையமும், அரசும் உத்தரவிட்டுள்ளது. அது கண்காணிக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., பா.ஜனதா, பா.ம.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 30 சதவீத மழை அதிகமாக பெய்தும் கூட, எந்தவொரு கண்மாயோ, குளமோ உடையவில்லை. இதற்கு குடிமராமத்து பணியில் வரத்து கால்வாய் சீரமைப்பு, கரைகள் பலப்படுத்தப்பட்டது தான் காரணம். இதே நிலை தான் தமிழகம் முழுவதும் உள்ளது.
உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட தானிய வகைகள் அதிகமான மழை பெய்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. அதற்குரிய அறிக்கையை பெற்று விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story