தூத்துக்குடியில் போர்க்கப்பலை பார்வையிட மக்கள் கூட்டம் அலைமோதியது


தூத்துக்குடியில் போர்க்கப்பலை பார்வையிட மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 16 Dec 2019 3:30 AM IST (Updated: 16 Dec 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போர்க்கப்பலை பார்வையிட மக்கள் கூட்டம் அலைமோதியது.

தூத்துக்குடி, 

இந்திய கடற்படை தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடற்படை தினத்தை கொண்டாடும் வகையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.சுமேதா என்ற போர்க்கப்பல் வந்தது.

இந்த கப்பல் 105 மீட்டர் நீளமும், 2 ஆயிரத்து 200 டன் எடையும் கொண்டது. இந்த கப்பல் மணிக்கு 25 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடியது ஆகும். இதில் 76 எம்.எம். அதிநவீன துப்பாக்கி மற்றும் ஹெலிகாப்டர் தளம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இந்த கப்பல் கடத்தல்காரர்களிடம் இருந்து சரக்கு கப்பல்களை பாதுகாக்கும் பணியிலும், பொருளாதார மண்டலங்களை பாதுகாக்கும் பணியிலும், கடலோர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த கப்பலை நேற்று முன்தினம் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று விடுமுறை தினம் என்பதால் காலை முதல் ஏராளமான மக்கள் கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு சென்றனர்.

அதேபோன்று பஸ்களிலும் அதிக அளவில் மக்கள் மதிய உணவையும் எடுத்துக்கொண்டு சுற்றுலாவுக்கு செல்வது போன்று குடும்பத்தோடு வ.உ.சி. துறைமுக வாசலுக்கு வந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காலையில் பொதுமக்கள் பலத்த சோதனைகளுக்கு பிறகு கப்பலை பார்வையிட துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்தது. துறைமுகத்தின் உள்ளே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் கப்பலை பார்ப்பதற்காக வரிசையில் நின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. இதனால் பொதுமக்கள் கப்பலில் ஏறி பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. வெளியில் இருந்து மட்டும் கப்பலை பார்த்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அதே நேரத்தில் துறைமுகத்துக்கு வெளியேயும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் கார்களில் வந்தனர். ஏற்கனவே துறைமுகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காத்து இருந்ததால், மதியம் 1 மணி அளவில் துறைமுகத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியில் நின்ற மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் அங்கு இருந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து துறைமுக வாசலில் கூட்டம் அதிகரித்ததால், சுமார் 2 கிலோ மீட்டருக்கு முன்பு அனல்மின்நிலைய ரவுண்டானாவில் போலீசார் தடுப்புகள் வைத்து துறைமுகத்துக்கு செல்லும் பொதுமக்களை திருப்பி அனுப்பினர். அதன்பிறகு மெல்ல மெல்ல மக்கள் அங்கிருந்து கலைய தொடங்கினர். இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மக்கள் கூட்டம் அலைமோதியதால் துறைமுகத்தில் இருந்து சரக்கு லாரிகள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Next Story