தனுஷ்கோடியில், கரை ஒதுங்கி கிடந்த 700 கிலோ பீடி இலை பண்டல்கள் - இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பலுக்கு வலைவீச்சு


தனுஷ்கோடியில், கரை ஒதுங்கி கிடந்த 700 கிலோ பீடி இலை பண்டல்கள் - இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Dec 2019 3:30 AM IST (Updated: 16 Dec 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி கடற்கரையில் கிடந்த 700 கிலோ பீடி இலை பண்டல்களை கடலோர போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் கம்பிபாடு, அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதியில் பல இடங்களில் பீடி இலை பண்டல்கள் கரை ஒதுங்கியிருப்பதாக கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கடலோர காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடந்த 23 மூடை பீடி இலைகளை கைப்பற்றினர்.

அந்த மூடைகளில் இருந்த சுமார் 700 கிலோ எடை கொண்ட பீடி இலைகளை சரக்கு வாகனம் ஒன்றில் ஏற்றி ராமேசுவரத்தில் உள்ள கடலோர காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டுகளிலும் பீடி இலை பண்டல்கள் கரை ஒதுங்கி கிடப்பதாக தகவல் வந்துள்ளது. கடலோர காவல் படை மூலம் அந்த பீடி இலை பண்டல்களை எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்கள் பீடி இலை பண்டல்களை படகு மூலம் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லும் போது நடுக்கடலில் இந்திய கடற்படையின் ரோந்து கப்பல் வருவதை கண்டதும் பீடி இலைமூடைகளை கடலில் வீசி விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என கூறப்படுகிறது. பீடி இலை பண்டல்களை படகு மூலம் கடத்தி சென்று கடலில் வீசிய நபர்கள் யார் என்பது குறித்து கடலோர போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடலோர போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 700 கிலோ பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Next Story