காதலை மறைக்க நாடகம்: பேய் பிடித்தது போன்று நடித்த இளம்பெண்ணை பிரம்பால் அடித்த திருநங்கை


காதலை மறைக்க நாடகம்: பேய் பிடித்தது போன்று நடித்த இளம்பெண்ணை பிரம்பால் அடித்த திருநங்கை
x
தினத்தந்தி 16 Dec 2019 4:30 AM IST (Updated: 16 Dec 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில், காதலை மறைக்க பேய் பிடித்தது போன்று நாடகமாடிய இளம்பெண்ணை, திருநங்கை பிரம்பால் அடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் கன்னங்குறிச்சி பாண்டியன் தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை கட்டிய திருநங்கை ஒருவர் பூசாரியாகவும் உள்ளார். கோவிலில் பவுர்ணமி, அமாவாசை மற்றும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பூஜையின் போது பேய் ஓட்டுதல், பில்லி, சூனியம், திருட்டு போன பொருட்கள் குறித்து திருநங்கை பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது உண்டு. இதையொட்டி கோவிலில் நாளடைவில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

இதனால் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அருள்வாக்கு பெறுவதற்காக இங்கு வந்து செல்கிறார்கள். திருநங்கை அருள்வாக்கு சொல்லும் நேரங்களில் முதலில் மயில் இறகால் வருடியும், சில நேரங்களில் பிரம்பாலும் அடிக்க தொடங்கி விடுவார். இதைப்பார்த்து சில நேரங்களில் பக்தர்கள் வெலவெலத்து போய்விடுவார்கள்.

இளம்பெண்ணுக்கு பேய்

இந்தநிலையில் சேலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பேய் பிடித்ததாக கூறி, அந்த பெண்ணின் பெற்றோர்,, கன்னங்குறிச்சியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றனர். கோவிலில் இளம்பெண்ணுக்கு மயில் இறகால் வருடியும், பிரம்பால் அடித்தும் திருநங்கை பேய் ஓட்ட தொடங்கினார்.

அப்போது அவர் பல்வேறு அம்மன் பெயர்களை சொல்லி பெண்ணின் மேல் இருக்கும் பேயை ஓடிவிடும்படி எச்சரிக்கை விடுத்தார். அதற்கு அந்த பெண் பேய் தன்மேல் இருப்பது போல் காட்டிக்கொண்டார். இதைப்பார்த்த திருநங்கை நீ எந்த ஊரு பேய், இந்த பெண்ணின் உடலில் இருந்து ஓடி விடுமாறு கூறினார். உன்மேல் பிடித்திருக்கும் பேயின் பெயர் என்ன என்று திருநங்கை கேட்டபோது, அந்த பெண் ஒரு பெயரை கூறினார்.

தந்தையை தாண்டி சத்தியம்

இதைத்தொடர்ந்து பெண்ணின் தந்தையிடம் இது யார் பெயர் என திருநங்கை கேட்டபோது, அது தன்னுடைய மகள் பெயர் தான் என்றார். இதனால் திருநங்கை ஆத்திரமடைந்தார். அந்த சமயத்தில் பூஜையில் இருந்த 3 பேர் எழுந்து அம்மனிடம் பொய் சொன்னால் ரத்த வாந்தி எடுப்பாய் என்று அந்த பெண்ணிடம் கூறினர். பின்னர் இளம்பெண்ணை திருநங்கை பல்வேறு வார்த்தைகளால் வசைபாடியதுடன், பிரம்பால் அடித்தார். இதனால் அந்த பெண் அம்மா வலிக்கிறது என சத்தம் போட்டார். தடுக்க வந்த பெற்றோர்களை திருநங்கை அதட்டியதால் அவர்கள் அமைதியாகி விட்டனர்.

இறுதியாக அந்த இளம்பெண், ஒருவரை காதலிப்பதாகவும், அதனை மறைக்க பேய் பிடித்ததாக கூறி நாடகமாடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பொய் சொல்லமாட்டேன் என அந்த பெண் தன்னுடைய தந்தையை தாண்டி சத்தியம் செய்தார். பின்னர் அந்த பெண்ணை எரியும் சூடத்தை அணைத்து சத்தியம் செய்யுமாறு திருநங்கை கூறினார். அதற்கு அந்த பெண் இரண்டு முறை சத்தியம் செய்வதுபோல் வலதுகையால் சூடத்தில் அடிக்காமல் அருகில் வெறும் தரையில் அடித்து சத்தியம் செய்தார். இதையடுத்து திருநங்கை மிரட்டியதால் அந்த பெண் இடதுகையால் சூடத்தை அணைத்து சத்தியம் செய்தார். பின்னர் அந்த பெண்ணை பெற்றோர் அழைத்து சென்று விட்டனர்.

பரபரப்பு

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், நான் முடியை விரித்து போட்டு பேய் பிடித்தது போன்று இருந்ததால் கோபத்தில் அவர் (திருநங்கை) என்னை அடித்தார். நான் ஒருவரை காதலித்தேன். எங்கள் காதல் எனது பெற்றோருக்கு தெரிந்தால் அடிப்பார்களோ? என்று பயந்தேன். நான் அவர்களை அச்சப்படுத்தும் வகையில் பேய் பிடித்தது போன்று நாடகமாடினேன். பெற்றோர்களை க‌‌ஷ்டப்படுத்தியதும் தவறுதான் என்றார். இந்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. சேலத்தில், காதலை மறைக்க பேய் பிடித்தது போன்று நாடகமாடிய இளம்பெண்ணை, திருநங்கை பிரம்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story