புனேயில் துணிகரம்: ரூ.9 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்


புனேயில் துணிகரம்: ரூ.9 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 16 Dec 2019 4:00 AM IST (Updated: 16 Dec 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

ரூ.9 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற துணிகர கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

புனே, 

புனே அருகே சக்கான் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் பாதுகாப்பிற்காக காவலாளி யாரும் இல்லை என தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கார் ஒன்று ஏ.டி.எம். மையம் முன்பு வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய 3 பேர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் ‘ஸ்பிரே’ அடித்து காட்சிகளை மறைத்தனர்.

பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இணைக்கப்பட்டு இருந்த மின்வயர்கள் மற்றும் இணைப்பு வயர்களை கட்டரால் துண்டித்தனர். தொடர்ந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து தாங்கள் வந்த காரில் தூக்கிப்போட்டு எடுத்து சென்றனர்.

இந்தநிலையில் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர் ஒருவர் எந்திரம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திருடப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 லட்சம் இருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சாலையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த துணிகர கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

புனேயில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story