திருச்செங்கோட்டில் பயங்கரம்: சொத்து தகராறில் மகன் அடித்துக்கொலை தந்தை போலீசில் சரண்


திருச்செங்கோட்டில் பயங்கரம்: சொத்து தகராறில் மகன் அடித்துக்கொலை தந்தை போலீசில் சரண்
x
தினத்தந்தி 16 Dec 2019 4:45 AM IST (Updated: 16 Dec 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் சொத்து தகராறில் மகனை அடித்துக்கொலை செய்த அவரது தந்தை போலீசில் சரண் அடைந்தார்.

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 58). இவரது மனைவி சாந்தி (52). இவர்களது மகன்கள் ஆனந்த் (38), அரவிந்த் (28). ஆனந்துக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் தனியே வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான அரவிந்துக்கு திருமணம் ஆகவில்லை.

மது குடிக்கும் பழக்கம் இருந்த அரவிந்த் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து சொத்தை விற்று தருமாறு தந்தை மணியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வழக்கம்போல் மதுபோதையில் வீட்டுக்கு சென்ற அரவிந்த், தந்தை மணியிடம் சொத்து தொடர்பாக தகராறு செய்தார்.

கட்டையால் அடித்தார்

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மணி வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். மதுபோதை தலைக்கேறியதால் அரவிந்த் அங்கேயே படுத்து தூங்கி விட்டார்.

இதற்கிடையே மணி வீட்டிற்கு வந்து பார்த்த போது அரவிந்த் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். தொடர்ந்து தன்னிடம் தகராறு செய்து வருவதால் ஆத்திரம் அடைந்த மணி, வீட்டில் இருந்த கட்டையை எடுத்து அரவிந்தின் தலையில் ஓங்கி அடித்தார்.

போலீசில் சரண்

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மணி திருச்செங்கோடு போலீஸ் நிலையத்திற்கு சென்று மகனை அடித்துக்கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அரவிந்தின் உடலை கைப்பற்றினர். 

Next Story