கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்த காட்டுயானை - எதிரே வந்த காரை காலால் மிதித்ததால் பரபரப்பு


கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்த காட்டுயானை - எதிரே வந்த காரை காலால் மிதித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Dec 2019 9:45 PM GMT (Updated: 15 Dec 2019 8:56 PM GMT)

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானை உலா வந்தது. அப்போது எதிரே வந்த காரை காலால் மிதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி,

ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்துக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் குஞ்சப்பனை அருகே 2-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று மாலை 4 மணியளவில் காட்டுயானை ஒன்று உலா வந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதியடைந்து, ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

எனினும் காட்டுயானை அங்கும், இங்குமாக தொடர்ந்து உலா வந்தது. அப்போது காட்டுயானைக்கு எதிரே சாலையோரமாக கார் ஒன்று முன்னேறி செல்ல முயன்றது. தனக்கு எதிரே ஓட்டி வரப்பட்ட அந்த காரை கண்டதும் காட்டுயானை திடீரென ஆவேசம் அடைந்தது. உடனே ஓடி சென்று காரை காலால் மிதித்தது. உடனே டிரைவர் காரை நிறுத்தினார். தொடர்ந்து 2 முறை காலால் காரை மிதித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர் சிறிது நேரம் சாலையில் உலா வந்த காட்டுயானை, அதன்பிறகு அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

இந்த காட்டுயானை கடந்த 2 வாரங்களாக சாலையில் உலா வருகிறது. சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை தாக்க முயன்றதும், இதே காட்டுயானை தான். எனவே மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன், இந்த காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீண்டும் காட்டுயானை சாலைக்கு வராதபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதற்கிடையில் காரை காலால் காட்டுயானை மிதிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story